அழிவின் விளிம்பில் யாழ். குடாநாடு!

Report Print Nivetha in சமூகம்

கல்வி, கலை, கலாச்சாரத்தில் உச்சம் தொட்ட யாழ். குடாநாடு இன்று கொலை, கொள்ளை, வாள் வெட்டில் உச்சம் கண்டுள்ளது.

வர்த்தகம், விவசாயம், தொழில், கல்வி என்று புரட்சியால் முன்னேறி வந்த யாழின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி தமிழனின் வளர்ச்சியை வேர் அறுக்க தொடங்கியது யார்? யுத்தத்தின் பின்னர் தமிழன் வரலாற்றை புரட்டிப் போட்டது போல, தமிழ் கலாச்சாரத்தையும் சீர் குலைத்து விட்டார்கள்.

வடக்கில் குறிப்பாக யாழ். மாவட்டத்தில் அண்மைய நாட்களில் குற்றச் செயல் அதிகரித்து கொண்டு செல்கின்றது. படுகொலைகள், கற்பழிப்புக்கள், துணிகர கொள்ளைகள், வாள்வெட்டுகள் என்று பாரிய உச்சபட்ச வன்செயல்கள் கட்டுக்குள் அடங்காமல் அதிகரித்து கொண்டு செல்கின்றன.

இதனால் இம்மாவட்டத்தை அச்ச பீதி ஆட்கொண்டு உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் குழம்பியுள்ள சூழலில் கல்வி நிலையிலும் பின் தள்ளி சென்று விட்டனர்.

போருக்கு பின்னரான யாழ். மாவட்டத்தில் என்றும் இல்லாதவாறு வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ள போதிலும் இவற்றை கட்டுப்படுத்த பொலிஸ் தரப்பு உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக இல்லை என்பது வெளிப்படையாக தெரிகின்றது.

யுத்தத்தில் முடிவு காண முடியும் என்றால் ஏன் இந்த குற்றச் செயல்களுக்கு அரசாங்கத்தினால் முடிவு கட்ட முடியவில்லை. இளைஞர்கள் மத்தியில் மிக வேகமாக போதைப்பொருள் என்ற கொடிய நோய் பரவி வருகின்றது.

இன்று பெரும்பாலும் மாணவர்களை இலக்கு வைத்து தான் போதைப்பொருள் வர்த்தகம் மேற்கொள்ளப்படுகின்றது. வர்த்தக ரீதியில் உலகெங்கும் போதைப் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. சட்டவிரோதமான கடத்தல் போன்ற வழிகளிலேயே இவ்வர்த்தகம் நடைபெறுகின்றது.

இளைய தலைமுறையினரை கவரும் வகையில் நவீன உருவிலும், எளிமையான முறையிலும் போதைப் பொருள் தயாரிக்கப்படுகின்றது. மிகச் சிறிய அளவு பாவிப்பதன் மூலம் அதிகளவு போதை தரக்கூடியதாக அவை காணப்படுகின்றது.

மேலும், இவை இலகுவாக கடத்தவும் பரிவர்த்தனை செய்யவும் வாய்ப்பாக அமைந்தன. வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட ஹெரோயின் போன்ற போதைப்பொருட்கள் மாத்திரை வடிவத்திலும் தயாரிக்கப்படுகின்றன.

போதைப் பொருளை உடலிற் செலுத்திக் கொள்ளும் பழக்கம், தீவிர பாவனையாளரிடையே உள்ளது. இதனையே தற்போதைய இளைஞர் சமூகம் விரும்புகின்றது.

யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னொரு காலத்தில் கொழும்புக்கு நிகராக யாழ்ப்பாணத்தின் கல்வி தரம் காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் முன்னர் காணப்பட்ட கல்வி நிலையை மீண்டும் கொண்டு வரவேண்டும். இதற்கு நன்கு பயிற்றுவிக்க கூடிய ஆசிரியர்கள் தேவையாக இருக்கின்றார்கள் என்றும் கூறியிருந்தார்.

வடக்கில் யுத்தம் முடிவுக்கு வந்ததே தவிர இதர விவகாரங்கள் எதுவும் இதுவரை முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. இப்படியான சூழலில் போதைப் பொருள் பாவனையும் தலைவிரித்தாட தொடங்கியுள்ளது.

இவற்றிற்கு தீர்க்கமான முடிவு ஒன்றை பிரதமர் முன்வைத்தாலே போதும் பாரிய ஒரு மாற்றத்தை கல்வியில் மட்டும் அல்ல அனைத்திலும் காண முடியும்.

இதேவேளை, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

Latest Offers