அரச தொழில் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிக்க நடவடிக்கை

Report Print Gokulan Gokulan in சமூகம்

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளை இணைக்கின்ற அரச தொழில் வெற்றிடங்களுக்கு நியமிப்பது சம்பந்தமாக கிழக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

காத்தான்குடி கல்வி கோட்டம் கல்வியில் முன்னேற்றம் காண்பதற்காக நாங்கள் எப்போதும் எம்மால் இயன்ற பங்களிப்புக்களை வழங்கி வருகின்றோம்.

பாடசாலைகளுக்கு இடையில் ஒற்றுமையுடன் கூடிய புரிந்துணர்வு இருக்க வேண்டும். கல்வித்துறையில் நாங்கள் முன்னேற்றம் காண அது மிக முக்கியம்.

நவீன யுகத்தில் வாழ்கின்ற மாணவர்கள் அதற்கு ஏற்ப தமது கல்வித்துறைகளை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன், புதிய துறைகளை தெரிவு செய்வதன் ஊடாக போட்டி மிகுந்த தொழிற்சந்தையில் முன்னோக்கி செல்ல வேண்டும்.

நாட்டில் பட்டதாரிகள் ஆயிரக்கணக்கானவர்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்புக்கள் இல்லை. அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியும் பலருக்கு இன்னும் தீர்வில்லை.

அரசாங்கம் நெருக்கடிகளுக்கு மத்தியில் இருப்பதால் அவர்களுக்கு நிரந்தர தீர்வினை வழங்க முடியாதுள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வெளியேறிக்கொண்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தொழில் வழங்கும் வாய்ப்பு, வசதி அரசாங்கத்திடம் இல்லை.

இருப்பினும், பட்டதாரிகள் விடயத்தில் நாங்கள் தொடர்ந்தும் பேசி வருகின்றோம். கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடயம் சம்பந்தமாகவும், இருக்கின்ற அரசாங்க தொழில் வெற்றிடங்களுக்கு அவர்களை நியமிப்பது சம்பந்தமாகவும் ஆளுநருடன் கலந்துரையாடியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நிகழ்வு பாடசாலை வளாகத்தில் பாடசாலை அதிபர் யாசீர் அரபாத் தலைமையில் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers