மூன்று இலங்கை இளைஞர்களுக்கு சிங்கப்பூரில் நேர்ந்த நிலை

Report Print Ajith Ajith in சமூகம்

தமது கடவுச் சீட்டில் போலி மலேசியா விசா மோசடியில் ஈடுபட்ட மூன்று இலங்கை இளைஞர்களுக்கு சிங்கப்பூரில் 8 மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச்சாவடிகள் அதிகார சபை இன்று அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளது.

உட்லேண்டில் உள்ள சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது, கடந்த ஜுன் மாதம் 27ஆம் திகதி குடிவரவு மற்றும் சோதனைச்சாவடிகள் அதிகாரசபையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்லையா செல்வமணி ரொஹான் (26), கந்தநாதன் ஜசிதரன் (23), ரூபன் டயஸ்ரெபின்சன் (20) ஆகிய மூவரும் இலங்கையிலிருந்து தொழில்வாய்ப்பை எதிர்ப்பார்த்து சென்றுள்ளனர்.

முதல் இரு இளைஞர்களும் ரஜினிகாந்த் என்ற இலங்கை முகவர் ஊடாக மலேசியாவுக்கு தலா 3 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாவுக்கும், மூன்றாம் நபர் அதே பயணத்தை வேறொரு முகவர் ஊடாக 5 இலட்சம் ரூபாவுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஜுன் மாதம் 18ஆம் திகதி சிங்கப்பூர் சென்றடைந்த ரொஹான் மற்றும் ஜசிந்தன் ஆகியோரின் கடவுச் சீட்டில் போலியான மலேசிய விசா இணைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜுன் 26ஆம் திகதி சிங்கப்பூரை வந்தடைந்த ரூபனும் அதனையே செய்துள்ளார்.

இதையடுத்து, கடந்த 27ஆம் திகதி மலேசியன் கார் ஒன்றை வாடகைக்கு அமர்த்திய முகவரான ரஜினிகாந்த், குறித்த மூன்று இளைஞர்களையும், இரவு 8 மணியளவில் மலேசியாவுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த நிலையில், குறித்து மூவரும் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் அதிகாரினால் இரவு 9.20 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேநேரம், குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே ரஜினிகாந்த் சிங்கப்பூரிலிருந்து வெளியேறியுள்ளார்.

அத்துடன், குறித்த சம்பவத்தில் தொடர்புடைய மலேசிய கார் சாரதியும் பின்னர் இனங்காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலியான வெளிநாட்டு பயண ஆவணங்களைப் பயன்படுத்திய குற்றத்திற்காக கடவுச்சீட்டு சட்டத்தின் 47(6) பிரிவின் கீழ் ஒரு நபருக்கு 10ஆயிரம் டொலர் அபராதம் அல்லது 10 ஆண்டுகளுக்கு குறையாத தண்டணை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers