வலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை

Report Print Thirumal Thirumal in சமூகம்

வலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தலைவரும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளருமான ஜகத் குமார சமரஹேவா மற்றும் அவருடைய வாகன சாரதியாக செயற்பட்ட ஜடிலலால் பெர்னான்டோ ஆகியோருக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை நுவரெலியா மேல்நீதிமன்றம் இன்று அவர்களுக்கு வழங்கியுள்ளது.

விவசாய திணைக்களத்துக்கு சொந்தமான ஜீப் வண்டியை கடந்த 2004இல் முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதுடன் அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்களின் பேரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுச் சொத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றத்துக்காக 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்த மேல்நீதிமன்ற நீதிபதி எஸ்.யூ.பீ.கரலியத்த, 105 லட்சம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 4 வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும். கைத்துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 2 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் 7 ஆயிரத்து 500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் உடபுஸ்ஸல்லாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக செயற்பட்ட ருவண் குணசேகர உள்ளிட்டவர்களினால் குறித்த நபர்களுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...