சட்டவிரோத கடற்தொழிலை தடைசெய்வது குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை

Report Print Mohan Mohan in சமூகம்

சட்டவிரோத மீன்பிடித்தொழிலை தடைசெய்வது தொடர்பில் அரசாங்கத்துடன் பேசவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடற்தொழிலை தடைசெய்ய கோரி மீனவர்கள் போராட்டம் முன்னெடுத்து வரும் நிலையில் இன்று பிற்பகல் அவர்களை சந்தித்து மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்தாலோசித்த பின்னர் இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை தடை செய்யக்கோரி முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் முன்னால் கடற்தொழிலாளர்கள் இன்று ஆறாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

வெளி மாவட்டங்களில் இருந்து வந்து சட்டவிரோத கடற்தொழிலை மேற்கொள்ளும் மீனவர்களினால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் கடல் வளம் திட்டமிட்டு அழிக்கப்படுவதாகவும் மீனவர்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் சட்டவிரோத கடற்தொழில் முற்றாக தடைசெய்யும் வரை தமது போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் முதலமைச்சரிடம் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

மேலும், சட்டவிரோத மீன்பிடித்தொழிலை மேற்கொள்ளும் வெளிமாவட்ட மீனவர்களை தடைசெய்வது தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.