மலையகத்திலும் புகையிரத சேவை ஸ்தம்பிதம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

புகையிரத சேவையாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலை நிறுத்தம் காரணமாக மலையத்திற்கான புகையிரத சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக புகையிர நிலைய கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக இன்றைய தினம் பாடசாலை செல்லும் மாணவர்கள், அரச ஊழியர்கள் உட்பட பொது மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பலர் புகையிரத நிலையத்திற்கு வருகை தந்து புகையிரதம் இல்லாததன் காரணமாக ஏமாற்றத்துடன் மீண்டும் பேருந்து நிலையங்களை நோக்கிச் சென்றுள்ளனர்.

புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தபால் சேவைகளும் பாதிக்கப்பட்டதால், வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக இருந்த தபால் பொதிகள் வான்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

எனினும் பயணிகளின் நலன் கருதி இ.போ.சேவைக்கு சொந்தமான பல பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதன் காரணமாக பாரியளவிலான பாதிப்புக்கள் தடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் புகையிரத சேவையாளர்களின் வேலை நிறுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவர பொறுப்பு வாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.