பொலிஸாரிடம் இருந்து தப்பி ஓடிய கைதிகள்! சிலமணி நேரங்களிலேயே ஒருவர் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

மட்டக்களப்பு - வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்து செல்லும் போது தப்பி ஓடிய இரு கைதிகளில் ஒருவர் சில மணி நேரங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம் பெற்றுள்ளது. மேலும் இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

போதைவஸ்த்து மாத்திரைகளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பெயரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தின் உத்தரவின் படி நேற்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

மீண்டும் நேற்றைய தினம் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த போது அவர்கள் மீதான விளக்கமறியல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்றம் கலைந்த பின்பு கைதிகளை சிறைச்சாலை வாகனத்தில் ஏற்ற தயாரான போது குறித்த இரு கைதிகளும் தங்கள் கைவிலங்கினை அகற்றிவிட்டு வேறு வேறு திசைகளில் தப்பி ஓடியுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தப்பி ஓடிய கைதிகளில் ஒருவர் அந்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்ததாகவும் ஒரு சில மணித்தியாலங்களில் குறித்த நபரை கைது செய்ததாகவும், தொடர்ந்தும் தப்பி ஓடிய மற்றைய நபரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாவும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.