கொழும்பில் பிரித்தானிய இளைஞர்கள் மரணம்! வெள்ளவத்தையில் கைதானவருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Report Print Murali Murali in சமூகம்

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட பிரித்தானியாவின் இரண்டு ரக்பி வீரர்களின் மர்மமரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சந்தேநபரை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் கடந்த 31ம் திகதி கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். உயிரிழந்த இளைஞர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரம் செய்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

இன்றைய வழக்கு விசாரணையின் போது, சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் கைது செய்யப்படவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, இந்த சம்பத்துடன் தொடர்புடைய ஏனையவர்களை கைது செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளதுடன், வழக்கு விசாரணைகளையும் எதிர்வரும் 24ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இதேவேளை, கடந்த மே மாதம் 10ம் திகதி இலங்கை வந்த 22 பேர் கொண்ட பிரித்தானிய ரக்பி அணி, மே 12ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற சினேகபூர்வ ரக்பி போட்டிகளில் பங்குகொண்டது.

இந்த போட்டியில் விளையாடிய இரண்டு பிரித்தானிய நாட்டு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பெட் தோமஸ் ரீட் மற்றும் ஹாவட் தோமஸ் அன்ரு ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.

இந்த வீரர்களின் மரணத்திற்கு அதிக போதைப்பொருள் பாவனையே காரணமென தெரியவந்துள்ளது. இதனையடுத்து முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், பிரித்தானிய ரக்பி வீரர்கள் இருவருக்கும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த சந்தேகநபர் வௌ்ளவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.