அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பை உதாரணமாக கொண்டு வழக்கு! இலங்கையர்களுக்கு தலா பத்து கோடி ரூபா?

Report Print Kamel Kamel in சமூகம்

இலங்கையில் க்ளைபோசைட் என்னும் இரசாயன பயன்பாட்டின் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களுக்காக தலா பத்து கோடி ரூபா நட்டஈடு கோரி உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளது.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பேராசிரியர் சன்ன ஜயசுமன கொழும்பு ஊடகமொன்றுக்கு இது பற்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் க்ளைபோசைட் காரணமாக புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்களினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து கோடி ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென வழக்குத் தொடரப்பட உள்ளது.

அமெரிக்காவின் மென்சென்டோ நிறுவனத்திற்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றமொன்று வழங்கிய தீர்ப்பை முன்னுதாரணமாக கொண்டு வழக்குத் தொடரப்பட உள்ளது.

இலங்கையில் க்ளைபோசைட் இரசாயன பயன்பாட்டினால் சுமார் 25,000 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

இந்த இரசாயன பயன்பாட்டினால் சிறுநீரக நோய்கள் மற்றும் புற்று நோய்கள் ஏற்படுவது ஆதாரபூர்வமாக ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது என்ற போதிலும் இந்த விடயம் இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

ஆய்வு நடத்தியவர்கள் சார்பில் நானும், உயிரிழந்தவர்களின் பிள்ளைகளும், விவசாய அமைப்புக்களும், தற்பொழுது நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரும் இணைந்து வழக்கு தொடரவுள்ளோம்.

அமெரிக்காவின் மென்சென்டோ மற்றும் இலங்கையில் அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் வழக்குத் தொடரப்படும் என பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.