நுண்கடன் பிரச்சினைகளால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன

Report Print Kumar in சமூகம்

சமுர்த்தியில் கடன்பெறுவதற்கு எந்த இழுத்தடிப்பும் நடப்பதில்லை. சமுர்த்தியில் கடன்பெற்றால் ஏமாற்ற முடியாது என்பதனாலேயே அங்கு கடன்பெற செல்ல தயங்குகின்றனர் என மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் மா.தயாபரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நுளம்பு பெருகுவதை தடுக்கும் வகையில் கிணறுகளை மூடுவதற்கான வலைகள் வழங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

டெங்கு தாக்கம் என்பது மிகவும் கொடிய ஒரு தாக்கமாக நான் கருதுகின்றேன்.நாங்கள் எமது பகுதியை சுத்தமாக வைத்திருப்பதன் ஊடாக இவ்வாறான தாக்கங்களை கட்டுப்படுத்தமுடியும்.

டெங்கு நோயின் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான முழுப்பொறுப்பினையும் சமூகமே கொள்ளவேண்டும். வெறுமனே அதிகாரியை மட்டும் குற்றம் சுமத்துவதினால் அதனை கட்டுப்படுத்த முடியாது.

நுண்கடன் பிரச்சினைகளால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. நாங்கள் இந்த நுண்கடன் பிரச்சினைக்கு வெறுமனே நுண்கடன் வழங்குபவர்களை மட்டும் குற்றம் சுமத்தி விட்டு இருந்திட முடியாது.

இதற்கான பொறுப்பினை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். குடும்பங்களில் சரியான முறையில் கட்டமைக்கள் இல்லாமையே இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

நுண்கடனை பெறாவிட்டால் நுண்கடன் நிறுவனங்கள் கடன் வழங்காது. அவர்கள் கடனை திணிப்பதில்லை. நாங்களே அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்கின்றோம்.

சுகபோக வாழ்வினை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக சிலர் இவ்வாறான சிக்கல்களுக்குள் சிக்குகின்றனர். கடன்களை பெற்று அவற்றினை வீண்விரயம் செய்வதனாலேயே இந்த பிரச்சினை ஏற்படுகின்றது.

கடன்களை பெற்றுக்கொள்பவர்கள் அவற்றினை சிறந்த முறையில் முதலீடாக கொண்டு தொழிலை ஆரம்பிக்கும் போது வாழ்க்கையினை முன்னேற்றிக்கொள்ளமுடியும்.

கிராம சேவையாளர்கள் நுண்கடன் பெறுவதற்காக இருப்பிடத்தினை உறுதிப்படுத்தி தருமாறு கோருபவர்களுக்கு அதனை உறுதிப்படுத்தி வழங்கவேண்டாம் என்ற உத்தரவினை வழங்கியுள்ளேன்.

சமுர்த்தி வங்கி ஊடாக கடன்களை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆனால் சமுர்த்தி கடனைப்பெற்று அதனை உண்ணுவதற்கும் ஆடம்பரத்திற்கும் செலவு செய்யவதற்கு அனுமதிக்க முடியாது.

முறையான தொழில் ஆரம்பிப்பதற்கான திட்டத்துடன் வருபவர்களுக்கு எவ்வளவு கடன் வழங்குவதற்கும் தயாராக இருக்கின்றேன். பெறும் கடனை செலுத்துவது உங்கள் கடமையாகும்.

நுண்கடனை பெறுபவர்கள் சமுர்த்தியில் கடன் பெறுவது காலம் செல்வதாக தெரிவிக்கின்றனர். அது உண்மையில்லை.

சமுர்த்தியில் உள்ளவர்களை ஏமாற்ற முடியாது என்பதற்காகவே அவர்கள் அங்கு செல்கின்றனர். சமுர்த்தியில் கடன்பெறுவது நீண்டகாலம் செல்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

இன்று எவ்வளவோ தொழில்கள் உள்ளபோதிலும் அதனை நாங்கள் செய்வதில்லை. வீட்டில் ஒரு தோட்டத்தினைக்கூட செய்ய முன்வருவதில்லை.

மட்டக்களப்பு கல்லடி, வேலூரில் உள்ள கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் ஏனைய பொது அமைப்புகள் இணைந்து இந்த வலைகளை மக்களுக்கு வழங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.