ஆலயத்திற்கு வழங்கப்பட்ட காணியை வேலியிட முற்பட்ட போது முறுகல்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு - மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட ஆரையம்பதி திருநீற்றுக்கேணி பிள்ளையார் ஆலய பகுதியில் நேற்று பதற்றம் ஏற்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஆரையம்பதி திருநீற்றுக்கேணி பிள்ளையார் ஆலயத்திற்கு பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட அரச காணிக்கு வேலியிடும் பணியை நேற்று ஆலய பரிபாலன சபையினர் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது அங்கு வந்த காத்தான்குடியை சேர்ந்த சிலர் அது தமது காணி எனவும், அதற்கு வேலியிட முடியாது எனவும் தெரிவித்து தர்க்கத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனையடுத்து பதற்ற நிலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இன்று சம்பவம் தொடர்பில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் பிரதேசபை தவிசாளர் ஆகியோருடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.