பல உயிரிழப்புக்களை ஏற்படுத்தியுள்ள பிரச்சினை! சுகபோக வாழ்விற்காக சிக்கலில் மாட்டிக்கொள்ளும் சிலர்

Report Print Kumar in சமூகம்
151Shares

நுண்கடன் பிரச்சினை காரணமாக பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் மா.தயாபரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுகபோக வாழ்வினை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக சிலர் இவ்வாறான சிக்கல்களுக்குள் மாட்டிக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் நுளம்பு பெருகுவதை தடுக்கும் வகையில் கிணறுகளை மூடுவதற்கான வலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று காலை கல்லடி, வேலூர் பல்தேவை கட்டடத்தில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு - கல்லடி, வேலூரில் உள்ள கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் ஏனைய பொது அமைப்புகள் இணைந்து இந்த வலைகளை மக்களுக்கு வழங்கியுள்ளன.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

நாங்கள் எமது பகுதியை சுத்தமாக வைத்திருப்பதன் ஊடாக டெங்கு நோய் ஏற்படுவதை தடுக்க முடியும். டெங்கு தொடர்பான பொதுவான சிரமதான பணிகளில் அனைவரும் பங்குபற்ற வேண்டும்.

அத்துடன் டெங்கு நோயை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் சிரமதானத்தில் சமுர்த்தி பயனாளிகள் தங்களது பங்களிப்பினை வழங்க வேண்டும்.

அவ்வாறு பங்குபற்றாதவர்களின் சமுர்த்தி உதவியை இடை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். டெங்கு நோயின் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான முழு பொறுப்பினையும் சமூகமே எடுக்க வேண்டும்.

வெறுமனே அதிகாரிகள் மீது மட்டும் குற்றம் சுமத்துவதினால் டெங்கு நுளம்புகள் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாது.

இதேவேளை தற்காலத்தில் நுண்கடன் பிரச்சினைகளால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. நாங்கள் இந்த நுண்கடன் பிரச்சினைக்கு வெறுமனே நுண்கடன் வழங்குபவர்களை மட்டும் குற்றம் சுமத்த முடியாது.

நுண்கடனை பெறாவிட்டால் நுண்கடன் நிறுவனங்கள் கடன் வழங்காது. அவர்கள் கடனை திணிப்பதில்லை. நாங்களே அவர்களிடம் இருந்து கடனை பெற்றுக் கொள்கின்றோம்.

சுகபோக வாழ்வினை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக சிலர் இவ்வாறான சிக்கல்களுக்குள் சிக்குகின்றனர். கடன்களை பெற்று அவற்றினை வீண்விரயம் செய்வதனாலேயே இந்த பிரச்சினை ஏற்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.