அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்: 305 குடும்பங்கள் நிர்க்கதி

Report Print Rakesh in சமூகம்

நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள காணியற்ற குடும்பங்களுக்கு காணி கொள்வனவு செய்து வழங்கும் திட்டம் இடை நடுவில் கைவிடப்பட்டுள்ளதால் 305 குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன.

2016ஆம் ஆண்டு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு, மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளினால் நடைமுறைப்படுத்தப்படாமையே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவிகள் (நிவாரணம்) வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கடந்த டிசம்பர் மாதம், பிரதமரின் செயலரினால் பணிப்புரை விடுக்கப்பட்டது.

எனினும், அதுவும் அதிகாரிகளினால் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

வலிகாமம் வடக்கிலிருந்து 1990ஆம் ஆண்டு போர் நடவடிக்கையினால் இடம்பெயர்ந்த மக்கள் நலன்புரி நிலையங்களிலும், உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களில் பலருக்கு காணிகள் சொந்தமாக இல்லை என்பது கண்டறியப்பட்டது. காணிகள் இல்லாதவர்களுக்கு தனியார் காணிகளை, அரசு கொள்வனவு செய்து வழங்குவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

2016ஆம் ஆண்டு இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டது. முதல் கட்டமாக 156 பேருக்கு தலா 2 பரப்பு 4 லட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்து வழங்கப்பட்டது.

எஞ்சிய 305 பேருக்கு காணிகளைக் கொள்வனவு செய்து வழங்குவதற்கான தொடர் அமைச்சரவைப் பத்திரம் மீள்குடியேற்ற அமைச்சினால் கடந்த 2 ஆண்டுகளாகச் சமர்பிக்கப்படவில்லை.

கடந்த டிசம்பர் மாதம், பிரதமரின் செயலர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் கொழும்பில் விசேட கூட்டம் நடைபெற்றது. கண்ணகி நலன்புரி நிலையம் மற்றும் சபாபதி நலன்புரி நிலையப் பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

காணிகள் கொள்வனவுக்கு பரப்புக்கு 2 இலட்சம் ரூபா போதாது என்றும் அதனை 4 இலட்சம் ரூபா வரையில் அதிகரிக்கவேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

உதவி (நிவாரணம்) வழங்கவேண்டும் என்றும் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. பிரதமரின் செயலர் இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதுடன், ஒரு பரப்புக்கு 3 இலட்சம் ரூபா வரையில் வழங்கலாம் என்றும், உதவிகளை உடனடியாக வழங்கலாம் என்றும் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறும் பணிப்புரை வழங்கியிருந்தார். இருப்பினும் இதுவரை அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவில்லை.

305 பேருக்குமான தனியார் காணிகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தனியார் காணிகளின் உறுதிகள் மாவட்டச் செயலகத்தினால் பரிசீலிக்கப்பட்டுள்ளன.

தனியார் காணிகளை வாங்குவதாக மாவட்ட செயலகம் கடந்த டிசம்பர் மாதம் உறுதியளித்திருந்தது. இருப்பினும் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படாமையினால் நிதி கிடைக்கவில்லை. காணிகளை வாங்கவில்லை.

தற்போது தனியார் காணி உரிமையாளர்கள், அவர்களது காணிகளை வேறு நபர்களுக்கு விற்கப் போவதாகக் கூறியுள்ளனர். மாவட்ட செயலக அதிகாரிகளும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளின் இழுத்தடிப்பினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.