யாழில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர் - பொலிஸார் வெளியிட்ட காரணம்

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவர் கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்டமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் காரைநகர் பிரதேசத்தில் சிறிய லொறி ஒன்றில் வந்த நபர்களினால் கடுமையாக தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்தார்.

அதே பகுதியை சேர்ந்த 54 வயதான நடராஜா தேவராஜா என்பவரே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் அவர் தாக்கப்பட்டு உயிரிழந்தமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

காரைநகர் வீதியில் நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, அதற்கு எதிர்பக்கத்தில் இருந்து வந்த சிறிய லொறியில் பயணித்தவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளின் மின்விளக்கு வெளிச்சத்தை குறைத்து ஓட்டுமாறு திட்டியுள்ளனர். பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் லொறியில் இருந்தவர்களையும் திட்டியவாறு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதனால் லொறியில் பயணித்தவர்கள் கோபமடைந்த நிலையில், மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்று அவரை மிக கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர்.

சம்பவத்தை அவதானித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் உறவினர் மோதலை தடுப்பதற்கு முயற்சித்துள்ளார். தடுக்க வந்தவரையும் லொறியில் வந்தவர்கள் தாக்கியுள்ளனர்.

தாக்குதலினால் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மோதலை தடுக்க தலையிட்டவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரைநகரை சேர்ந்த 54 வயதான நடராஜா தேவராஜா என்பவர் உயிரிழந்துள்ளார். சுப்ரமனியம் ஜீவனந்தன் என்பவர் காயமடைந்துள்ளார்.

தாக்குதல் மேற்கொண்டவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.