ஆட்சிப்பீடம் ஏற்றியவர்களுக்கே ஆப்பு! தமிழர் மலையை மீட்க வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா ஒலுமடு கிராமத்தின் வெடுக்குநாரி மலை பகுதியில் உள்ள ஆதிசிவன் ஆலயத்தை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிப்பதை எதிர்த்து கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் தமிழரின் பூர்வீக பிரதேசமான வெடுக்குநாரி மலை அமைந்துள்ளது.

குறித்த மலைப்பகுதியில் ஆதி லிங்கேஸ்வரருடைய லிங்கம் காணப்படுவதுடன், தமிழ் மக்களுடைய நகர்களின் புராதான பிராமிய எழுத்துக்களும் காணப்படுகின்றன.

கடந்த ஐந்து தலைமுறையாக அப்பகுதி மக்கள் குறித்த ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரமளவில் தொல்பொருள் திணைக்களத்தால் குறித்த மலைக்கு பொதுமக்கள் சென்று வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

பின்னர் இத்தடையினை தற்காலிகமாக தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் நெடுங்கேணி பொலிஸார் நீக்கி வழிபாடுகளை மாத்திரம் மேற்கொள்வதற்கு அனுமதியளித்துள்ளதுடன், ஆலயத்தினை புனரமைப்பு செய்வதற்கும் புதிய கட்டட நிர்மாணப்பணிகள் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆலயத்தினை முழுமையாக மீ்ட்டுத்தருமாறு கோரி வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாக சபையினருடன் கிராமமக்கள், பொது அமைப்புக்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எமது நிலம் எமது மலை , இந்துக்களை அவமதிக்காதே , வழிபாட்டுச் சுதந்திரத்தில் வாலாட்டாதே , இந்துக்கள் வழிபாட்டில் இடையூறுசெய்யாதே , ஆதி லிங்கேஸ்வரர் ஆக்கிரமிப்பு இந்துக்கள் அவமதிப்பு , தொல்பொருள் திணைக்களமே மலையை தோண்டி எடுக்கவா? ,

தெற்கின் சுதந்திரம் வடக்கில் இல்லை , வடக்கு என்றைக்குமே மாற்றான் வீட்டுப்பிள்ளை , மன்டியிடாது வடக்கின் மானம் , ஆட்சிப்பீடம் ஏற்றியவர்களுக்கே ஆப்பு வைக்கும் தேசிய அரசே? சைவநீதிக்கு சாவுமணி , இலங்கை அரசே எங்கே நீதி போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பினார்கள்.

இதேவேளை, குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறிஸ்கந்தராஜா, சிவசக்தி ஆனந்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரகளான சுரேஸ் பிரேமச்சந்திரன், வினோநோதராதலிங்கம், மாகாண சபை உறுப்பிரர்களான மயூரன், லிங்கநாதன், சத்தயலிங்கம், தியாகராஜா மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சமயத்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலர் பலர் கலந்து கெண்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஐனாதிபதிக்கு அனுப்புவதற்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமனிடம் ஒப்படைத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பின்னர் அங்கிருந்து பேருந்து மூலம் வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டனர்.

மேலதிக தகவல் - யது