கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய விசேட நீதிமன்றம் திறந்து வைப்பு

Report Print Murali Murali in சமூகம்

நிதி முறைகேடுகள் சம்பந்தமான வழக்குகளை துரிதப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட விசேட மேல் நீதிமன்ற முப்பிரிவின் முதலாவது மேல் நீதிமன்றம் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற கட்டடத் தொகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள தலைமையில் இன்று காலை இதுதொடர்பான இந்நிகழ்வு இடம்பெற்றது.

மூன்று பேர் கொண்ட விசேட மேல் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகளான சம்பத் விஜயரட்ன, சம்பத் அபேகோன், சம்பா ஜானகி ராஜரட்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விசேட மேல் நீதிமன்றத்தின் முதலாவது வழக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிக்குழாம் தலைமை அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரிக்கப்படவுள்ளது.

லிற்றோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 50 கோடி ரூபா பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதென நிதி மோசடி சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப் பத்திரிகையை கையளிப்பதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை விசேட மூன்று பேர் கொண்ட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த விசேட நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டமையானது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்கதக்து.