ஓட்டமாவடியில் வீடு ஒன்றில் தீ பரவல்

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வீடு ஒன்றில் தீ பரவியுள்ள நிலையில் வீட்டில் இருந்தவர்கள் எந்தவித ஆபத்துக்களும் இன்றி உயிர் தப்பியுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், வீட்டின் மேல்மாடியில் முற்றாக தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தில் மூத்தவன் போடியார் வீதியில் உள்ள நில அளவை திணைக்களத்தில் கடமைபுரியும் முஹம்மட் இஸ்மாயில் ஸபீர் என்பவரின் வீடே தீப்பற்றியுள்ளது.

இதன்போது, வீட்டுப்பொருட்களும் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயை அணைப்பதற்கு மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கும் படையினர், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் பிரதேச முஸ்லிம் தமிழ் இளைஞர்களது உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி கூறியுள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச சபையில் தீ அணைக்கும் படைப்பிரிவு இல்லாமை இந்த பகுதியில் ஏற்படும் தீயை உடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத துர்ப்பாக்கிய நிலை இருப்பதாகவும் மட்டக்களப்பில் இருந்து தீ அணைக்கும் படையினர் வருவதற்கு ஒரு மணித்தியாலம் தாமதம் ஏற்படுகின்றது.

எனவே ஓட்டமாவடி பிரதேச சபையிலும் தீ அணைக்கும் படையினர் இருந்தால் தீயினால் ஏற்படும் அழிவுகளை குறைக்கலாம் என ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி குறிபிட்டுள்ளார்.

மேலும், தீ சம்பவம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.