மக்கள் சேவைக்காக மக்களிடம் பணம் வசூலிக்கும் அரச அதிகாரிகள்

Report Print Sumi in சமூகம்

அரச நடமாடும் சேவைக்கு பொதுமக்களிடம் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் பணம் வசூலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் நிலமெஹவெர எனும் நடமாடும் சேவை ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், யாழ். மாவட்டத்தில் முதல் கட்டமாக எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் சண்டிலிப்பாய் மற்றும் உடுவில் பிரதேச செயலகங்களில் இந்த நடமாடும் சேவை இடம்பெற உள்ளது.

இந்த நடமாடும் சேவையில் கொழும்பிலிருந்து சுமார் 54 திணைக்களங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

இவர்களுக்கு தங்குமிட மற்றும் உணவு உட்பட்ட ஏனைய தேவைகளுக்காக பொதுமக்களிடம் பணம் சேர்க்குமாறு பணிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் கடமையாற்றுகின்ற கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து ஆகக்குறைந்தது கட்டாயம் 20000 இருபதாயிரம் ரூபா வசூலித்து வழங்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் குறித்த உத்தியோகத்தர்கள் தமது பிரிவுகளிலுள்ள பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களிடம் சிரமத்துடன் பணம் சேர்ப்தாக தெரிவிக்கன்றனர்.

இந்த நிலமெஹவெர நடமாடும் சேவைக்கு ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் ஒரு லட்சம் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளதோடு சேவையிலீடுபடுகின்ற அதிகாரிகளுக்கு மேலதிக பணிக்கொடுப்பனவும் பிரயாணப்படியும் வழங்கப்படுகின்றது.

குறித்த நடமாடும் சேவையின் போது உரிய காலத்திற்குள் அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், வாகன உரிமம் போன்ற பல ஆவணங்களை பெற்றுக் கொள்ளாதவர்களிடம் தண்டப்பணம் மற்றும் முத்திரை வரி போன்றனவும் அறவிடப்படவுள்ளது.

நடமாடும் சேவை நடைபெறவுள்ள பிரதேச செயலகங்களான சண்டிலிப்பாயில் 28 கிராம சேவகர் பிரிவுகளும் உடுவிலில் 30 கிராம சேவகர் பிரிவுகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.