மகாவலி அதிகாரசபையின் உத்தரவு: முல்லை தமிழ் மக்கள் மத்தியில் குழப்பம்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

முல்லைத்தீவு- நாயாறு பகுதிக்கு தெற்கு பக்கத்தில் கொக்கிளாய், கருணாட்டுக்கேணி, கொக்கு தொடுவாய் ஆகிய தமிழ் கிராமங்களில் அத்துமீறி குடியேறிய சிங்கள மீனவர்களுக்கு அங்கு நிரந்தரமாக தங்கியிருந்து தொழில் செய்வதற்கான காணி உத்தரவு பத்திரங்களை மகாவலி அதிகாரசபை வழங்கியுள்ளது. இதனால் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

1983ஆம் ஆண்டு போர் காரணமாக கொக்கிளாய், கருணாட்டுகேணி, கொக்குதொடுவாய் பகுதிகளில் இருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதன் பின்னர் தமிழ் மக்களுடைய குடியிருப்பு நிலங்கள் மற்றும் கரையோர பகுதிகளில் சிங்கள மக்கள் அத்துமீறி குடியேறியுள்ளனர்.

இந்நிலையில், குடியேற்றப்பட்ட சிங்கள மீனவர்கள் நிரந்தரமாக குடியிருப்பதற்கான அனுமதியைத் தமக்கு வழங்குமாறு கேட்டு வருவதுடன் கரையோரப் பகுதிகளில் சொகுசு பங்களாக்களையும் அமைத்துள்ளனர்.

இதனால் தமிழ் மீனவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையில் இரு சிங்கள மீனவர்களுக்கு எதிராக கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் ஊடாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கின் தீர்ப்பில் மேற்படி சிங்கள மீனவர்கள் தமிழ் மக்களின் நிலத்திலிருந்து வெளியேற வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் மகாவலி அதிகாரசபை மேற்படி மீனவர்களையும் சேர்த்து 8 பேருக்கு கொக்கிளாய், கருணாட்டுக் கேணி, கொக்குதொடுவாய் கிராமங்களில் நிரந்தரமாக தங்கியிருந்து கடற்றொழில் செய்வதற்கான காணி உத்தரவு பத்திரங்களை வழங்கியுள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்றம் சிங்கள மீனவர்கள் ஆக்கிரமித்துள்ள காணியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என தீர்ப்பளித்திருக்கும் நிலையில் அதனை மீறி மகாவலி அதிகாரசபை காணி உத்தரவு பத்திரங்களை வழங்கியமை ஊடாக இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கை எதேச்சதிகாரமாக மீறும் அளவுக்கு மகாவலி அதிகாரசபைக்கு அதிகாரம் உள்ளதா? என முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், மகாவலி அதிகாரசபை கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருணாட்டுகேணி ஆகிய கிராமங்களில் தமிழ் மக்கள் மீள்குடியேறாத காணிகளை மகாவலி அதிகாரசபை தற்போது அளவீடு செய்து வருகின்றது.

இதனால் அந்த காணிகளிலும் சிங்கள மக்கள் விரைவில் குடியேற்றப்படலாம் என மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.