முல்லைத்தீவில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம்! இளைஞர்கள் குழு கைது

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - உடையார்கட்டில் பாடசாலை மாணவியை விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபரையும், அதற்கு உதவிய நபர்களையும் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு - உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் உயர்தர பரீட்சை எழுதி வரும் 19 வயதான மாணவியை, பளையினை சேர்ந்த 22 வயது இளைஞன் தலைமையிலான குழு கடத்திச் சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

கடந்த 20ம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை கடத்தி சென்று பளைப் பகுதியில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மாணவியின் பெற்றோர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையினை தொடர்ந்து, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் பளைப் பகுதிக்கு சென்று, சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்திருந்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த 21ம் திகதி இரவு பளைப் பகுதிக்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த மாணவியை கடத்தி விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஸ்பிரயேகம் மேற்கொண்ட பளை பகுதியினை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.

சந்தேகநபர் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் பதில் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

மாணவியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, சந்தேகநபரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி பணித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்கள்.