முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆதாரத்தை பகிரங்கப்படுத்த வேண்டும் : க.துளசி

Report Print Theesan in சமூகம்

தாயக விடுதலைக்காக ஈய்ந்து போராடியவர்கள், முள்ளிவாய்க்கால் போர் ஓய்வின் பின்னர் ஏதுமற்றவர்களாக வாழ்ந்துவரும் இடர்பாடு மிக்க துர்ப்பாக்கிய சூழ்நிலையில் தாயக அரசியல் பரப்பில் எம்மை ஓரங்கட்டும் நிகழ்ச்சி நிரலில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கருத்துக்கள் பெரிதும் விசனத்துக்குள்ளாக்கி உள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது அமைப்பில் போராடி உயிர்நீத்தவர் போக, இறுதியில் கைதாகிய 12,000 இற்கும் மேற்பட்டவர்கள் இலங்கை சிறைகளிலும் பின்னரான தடுப்பு முகாம்களிலும் சொல்ல முடியாத வலிகளையும், துயரங்களையும் சந்தித்திருக்கின்றார்கள்.

அதனையும் எமது போராளிகள் விடுதலைக்கு செலுத்திய விலையாகவே கருதுகிறோம். ஒரு நாட்டில் யுத்தம் நடைபெறுகின்ற போதான புலனாய்வுத்தகவல் தேவையும் யுத்தம் முடிந்ததன் பின்னரான புலனாய்வுத்தகவல் தேவைக்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன.

அந்த தேவைகளை போராளிகள் மேற்கொள்ள வேண்டிய தேவையில்லை. அதற்கு எப்போதும் போராளிகள் தயாராகுவதுமில்லை. அதற்கு உங்களைப்போன்ற அரசியல்வாதிகளின் தயவு அவர்களுக்கு போதுமானது.

கடந்த காலங்களில் அதுதான் நடந்தேறியுள்ளது. போராளிகள் தொடர்பான முதலமைச்சரின் கருத்துக்கள் தொடர்பில் அது தொடர்பான ஆதாரத்தை முதல்வர் பகிரங்கப்படுத்த வேண்டும்.

அதே போன்று முதல்வர் அங்கம்வகிக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் இது தொடர்பில் பதிலளிக்க வேண்டும்.

போராளிகள் ஒரு இனத்தின் சாதிய குறியீடுகள் அல்லர். அவர்கள் இனத்தின் விடுதலைக் குறியீடுகள் என்பதனை அனைவருக்கும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.