எனக்கு எதிரான ஆதாரங்களை தாருங்கள்: அர்ஜூன் மகேந்திரன் அதிரடி கோரிக்கை

Report Print Kamel Kamel in சமூகம்

தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களின் பிரதிகளை தமக்கு அனுப்பி வைக்குமாறு இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் கோரியுள்ளார்.

சர்வதேச பொலிஸாரின் சிங்கப்பூர் கிளையின் ஊடாக குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் கோரியுள்ளார்.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரிய ஜயசுந்தர இது பற்றிய தகவல்களை இன்றைய தினம் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த வழக்கின் முதல் பிரதிவாதியாக அர்ஜூன் மகேந்திரனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அர்ஜூன் மகேந்திரன் எந்த நாட்டில் இருக்கின்றார் என்பது பற்றி ஆராயப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன, சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் இன்று வினவியிருந்தார்.

சந்தேக நபரான அர்ஜூன் மகேந்திரன் கோரியுள்ள ஆவணங்களை அனுப்பி வைப்பதில் ஏதேனும் சட்ட சிக்கல்கள் காணப்பட்டால் அதனையும் அடுத்த வழக்கு விசாரணைகளின் போது அறிவிக்குமாறு நீதவான் தெரிவித்துள்ளார்.

அர்ஜூன் மகேந்திரனை கைது செய்வதற்காக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு என்ன நேர்ந்துள்ளது என்பது பற்றியும் அறிவிக்குமாறு நீதவான், சட்ட மா அதிபர் திணைக்களப் பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை, விசாரணை என்ற போர்வையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தங்களது நிறுவனத்தின் அந்தரங்க தகவல்களை திரட்டுவதில் முனைப்பு காட்டி வருவதாக பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.