கொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஐவருக்கு நீதவான் கொடுத்த உத்தரவு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கிண்ணியா கொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் எம்.பீ.எம்.அன்பார் இன்று மாலை உத்தரவிட்டுள்ளார்.

ஹஜ் பெருநாளை கொண்டாடும் நோக்கில் மஹமாறு பகுதியில் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த இரண்டு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பில் ஒருவர் கூறிய ஆயுதத்தினால் குத்தப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்தனர்.

அதனையடுத்து சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு கள விஜயமொன்றினை மேற்கொண்ட பதில் நீதவான் எம்.பீ.எம்.அன்பார் மது அருந்திய இடத்தினையும் மழை பெய்த வேளை மதுப்பாவனையாளர்கள் கூடி இருந்த குடிசையினையும் பார்வையிட்டனர்.

இதேவேளை கிண்ணியா பொலிஸார் தடயப்பொருட்கள் சிலவற்றை கைப்பற்றியதுடன் சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கையை நீதிமன்றிற்கு சமர்ப்பிக்குமாறும் கட்டளையிட்டார்.

இதேவேளை திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி துமிந்த நிவன்கல சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.

அதன்படி, நெஞ்சில் கூறிய ஆயுதத்தினால் ஒரு குத்து குத்தப்பட்டுள்ளதாகவும் அதனால் இதயத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனாலேயே மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இதனையடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கிண்ணியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.