மகிந்த அணியின் ஆர்ப்பாட்டத்திற்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு! கொழும்பில் பலத்த பாதுகாப்பு

Report Print Murali Murali in சமூகம்

கூட்டு எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திற்கு எதிராக, நாளைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கவுள்ள நிலையில், அதற்கு எதிராக பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், நாளைய தினம் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணிக்கு தடை விதிக்குமாறு கோரி கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டு மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்ப்பு பேரணியின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் ஒன்று கூட தடை விதிக்குமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, நாளைய ஆர்ப்பாட்டப் பேரணிக்கு தடை விதிக்குமாறு உத்தரவிடக் கோரி வெலிக்கட பொலிஸார் தாக்கல் செய்த மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியால் மக்களின் அன்றாட நடவடிக்கைகக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கூட்டு எதிர்க்கட்சியினர் நாளைய தினம் “மக்கள் பலம் கொழும்புக்கு” என்ற கருப் பொருளில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில், கொழும்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பொலிஸ் திணைக்களம் மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்களை கொழும்பிற்கு அழைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers