ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கோரி மாகாண கல்வி அமைச்சு முற்றுகை

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - பதவிசிறிபுர யுனிட் 11 மற்றும் 12 பராக்கிரமபாகு மகா வித்தியாலத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி கிழக்கு மாகாண கல்வி அமைச்சு முற்றுகையிடப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இணைந்து இந்த முற்றுகை போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

திருகோணமலை மாவட்டத்தில் மிக அதிகஷ்டமான பாடசாலையாக இப்பாடசாலை காணப்படுகிறது. இங்கு 502 மாணவர்கள் கல்வியை தொடர்ந்து வருகின்றனர்.

எனினும், 18 ஆசிரியர்களே தற்போது கடமையில் உள்ளதுடன், 03ஆம் வகுப்பிற்கு ஆசிரியர் யாரும் இல்லை.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் மூன்று தடவை ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் மிக விரைவில் ஆசிரியர்களை நியமிக்குமாறும் அமைச்சின் செயலாளருக்கும், மாகாண பணிப்பாளருக்கும் பல தடவைகள் தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே கல்வி அமைச்சினை முற்றுகையிட்டு தமது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தியதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்போது பெற்றோர்கள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை சந்தித்து கலந்துரையாடிய நிலையில் ஆசிரிய வெற்றிடத்தை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், இன்னும் ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதாகவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கோமரங்கடவெல கல்வி வலயத்திற்கு உட்பட்ட ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயத்தில் நிலவுகின்ற ஆசிரியர்கள் வெற்றிடத்தை நிரப்புமாறு கோரி குறித்த பாடசாலை மாணவர்கள் மற்றம் ஆசிரியர்களும் இன்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு வந்துள்ளனர்.

இதன்போது அவர்கள் இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர்களை நியமிக்காவிட்டால் போராட்டங்களை முன்னெடுப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.