மகாவலி சிங்கள குடியேற்றம் தொடர்பில் சுமந்திரனுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்: ரவிகரன்

Report Print Mohan Mohan in சமூகம்

மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலங்கள் தொடர்பிலான முழுமையான விபரங்களை எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கவுள்ளதாக வட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு முன்னர் மாகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கே அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக எவருக்கும் அனுமதிப் பத்திரம் வழங்கப்படவில்லை என்று அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் இன்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளிக்கும் போதே வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்பு மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

தற்பொழுது இலங்கையில் அனைத்து மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்ற சிந்தனை உண்மையாக இருந்தால் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கையை ஜனாதிபதி ரத்து செய்ய வேண்டும்.

மேலும் கிபிர்ஓயா என்னும் திட்டத்தை மாகாண விகிதாசார அடிப்படையில் தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பிலான முழுமையான தகவல்கள் அடங்கிய ஆதாரங்களை எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.