போலி இரத்தினக்கற்களைக் கொடுத்து வித்தியாசமான முறையில் பெண்களை ஏமாற்றிய கும்பல்

Report Print Manju in சமூகம்

போலி இரத்தினக்கற்களைக் கொடுத்து பெண்களை ஏமாற்றி தங்க நகைகளை அபகரித்துச் சென்ற கும்பலை களுத்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முன்னாள் இராணுவ சிப்பாய் மற்றும் இரு பெண்களே இவ்வாறு கைது செய்யப்படடுள்ளனர்.

குறித்த கும்பல் முன்னாள் இராணுவ சிப்பாயின் தலைமையில் இயங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொள்ளைக் கும்பல் தொடர்பாக மதுகம பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்த பெண்ணொருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த ஜூன் மாதம் 19ம் திகதி, நான் மதுகம நகரிலுள்ள பேருந்து நிலையத்தில் இருந்தேன். அப்போது ஒரு தம்பதியினர் என்னருகில் வந்து அவர்களுக்கு ஒரு பிரச்சினை இருப்பதாகவும் இங்கு தங்கியிருப்பதற்கு ஒரு நல்ல இடம் இருக்கிறதா என்றும் கேட்டார்கள்.

நான் மதுகம நகரத்திலுள்ள நல்ல இடங்களை கூறிய பிறகு அவர்கள் இருவரும் என்னை மிகவும் நட்புடன் மதுகம நகரத்தில் அமைந்துள்ள தேவாலயத்துக்கு பின்னால் அழைத்துக்கொண்டு சென்றார்கள்.

அங்கு, அவர்கள் பிரச்சினையில் உள்ளதால் விரைவாக பணம் தேவைப்படுவதால் அவர்களிடமிருந்த இரத்தினக்கல் வகையை என்னிடம் தந்தார்கள்.

நான் அணிந்திருந்த ஒன்றரைப்பவுண் தங்கச்சங்கிலி, ஒன்றேகால் பவுண் பெண்டன் மற்றும் அரைப் பவுண் தங்க மோதிரம் என்பவற்றை கேட்டு வாங்கினார்கள்.

அவற்றை விற்று பணத்துடன் அதே இடத்திற்கு திரும்பி வருவதாகவும் என்னை அங்கு இருக்குமாறும் தெரிவித்தார்கள்.

நான் நீண்ட நேரம் அதே இடத்தில் காத்திருந்தேன், ஆனால் அவர்கள் வரவில்லை. பின்னர் அவர்கள் எனக்கு கொடுத்தவை போலியான இரத்தினக்கற்கள் என்பதை அறிந்தேன்.

அதன்பின்னர் இந்த குழு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக நான் அறிந்தேன்.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய பொலிஸ் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.

சந்தேக நபர் ஒருவரின் சட்டையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு மற்றும் தங்கச் சங்கிலி ஒரு தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மத்துகம பிரதேசத்தில் மற்றொரு பெண்ணை குறித்த கும்பல் ஏமாற்றியதாக தெரிவித்த முறைப்பாட்டுக்கமைய குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.