மன்னாரில் கைவிடப்பட்ட காணியிலிருந்த கிணற்றுக்குள் ஆபத்தான வெடிபொருட்கள்

Report Print Ashik in சமூகம்

மன்னார் - முருங்கன், கட்டுக்கரை கோர மோட்டை பகுதியில் கைவிடப்பட்டிருந்த காணியிலுள்ள கிணற்றினுள் கடந்த புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த வெடிபொருட்களை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று மாலை மீட்டுள்ளனர்.

காணியினை அதன் உரிமையாளர் கடந்த புதன் கிழமை துப்பரவு செய்தபோது அதில் ஆபத்தை விளைவிக்கும் வெடிபொருட்கள் இருப்பதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் காணியின் உரிமையாளர் உடனடியாக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் ஆழமாக காணப்பட்ட குறித்த கிணற்றுக்குள் வெடிபொருட்கள் வெடிக்காத நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர்.

தொடர்ந்து குறித்த இடத்தில் பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தி பின் உடனடியாக குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையிலேயே மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியோடு நேற்று மாலை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கிணற்றினுள் காணப்பட்ட அனைத்து வெடிபொருட்களையும் மிகவும் பாதுகாப்பான முறையில் அகற்றியுள்ளனர்.

மேலும், மீட்கப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்க செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers