புளியங்குளம் பகுதியில் கணவன், மனைவி மரணம்: மருத்துவ அறிக்கை வெளியானது

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, பரசங்குளம் கிராமத்திலுள்ள வீடொன்றில் மீட்கப்பட்ட கணவன், மனைவி சடலங்களில் ஆண் கழுத்து நெரிப்பட்டு மூச்சுதிணறி இறந்துள்ளதாகவும், பெண் தூக்கில் தொங்கியமையினாலேயே மூச்சுதிணறி உயிரிழந்துள்ளதாகவும் சட்ட வைத்திய நிபுணர் அறிக்கை உறுதி செய்துள்ளது.

குறித்த உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையிலேயே சட்ட வைத்திய அறிக்கையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையிலும், கணவன் நிலத்தில் கிடந்த நிலையிலும் இரு சடலங்களை பொலிஸார் மீட்டனர்.

குறித்த சம்பவத்தில் கௌதமி (வயது 19) என்ற பெண்ணின் சடலத்தையும், நந்தகுமார் (வயது 22) என்ற ஆணின் சடலத்தையுமே பொலிஸார் மீட்டிருந்தனர்.

குறித்த இருவரும் கனகராயன்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன், கடந்த 3 மாதத்திற்கு முன்னர் காதலித்து பதிவு திருமணம் முடித்துள்ளனர். பின்னர் பரசங்குளம் பகுதியை சேர்ந்த கணவனின் பாட்டனாரின் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனைவரும் உணவருந்திவிட்டு நித்திரைகொள்ள சென்றநிலையில் மறுநாள் (சனிக்கிழமை) அறையில் இருந்து குறித்த தம்பதிகள் வெளியே வராத நிலையில் இளைஞனின் பேத்தியார் கதவை திறந்துள்ளார்.

எனினும் அறையின் கதவு உள்பக்கமாக பூட்டபட்டிருந்தது. பின்னர் அயலில் உள்ளவர்களை அழைத்து கூறியுள்ளார். பின்னர் யன்னல் வழியாக ஏறிபார்த்த போது குறித்த இருவரும் சடலமாக கிடந்ததை அடுத்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தபட்டது.

இவ்வாறு மீட்கபட்ட சடலங்களில் கணவனின் நெற்றிப்பகுதியில் காயம் ஒன்று இருப்பதுடன், கழுத்துபகுதியிலும் சிராய்ப்பு காயங்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சடலத்திற்கு அருகில் இருந்து கொட்டான் ஒன்றும் கடிதம் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் எமது சாவிற்கு யாரும் காரணமில்லை. என்னை மன்னித்துவிடுங்கள் என்று எழுதப்பட்டுள்ளதுடன் வேறு விடயங்களும் எழுதப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சடலத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் பார்வையிட்ட வவுனியா மாவட்ட நீதவான் சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பணித்திருந்தார்.

அத்துடன் சம்பவம் தொடர்பாக பல சந்தேகங்கள் நிலவி வந்தநிலையில் சட்ட வைத்திய பரிசோதனை மேற்கொள்ளபட்டது.

அதனடிப்படையில் குறித்த இளைஞரின் கழுத்து நெரிப்பட்டு மூச்சுதிணறி இறந்துள்ளதாகவும், பெண் தூக்கில்தொங்கியமையினாலேயே மூச்சுதிணறி இறந்துள்ளதாகவும், பெண்ணின் இடுப்பிற்கு கீழான பகுதியில் கண்டல் காயங்கள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.