தமிழ் மக்களை குறிவைத்து பாயும் வனபாதுகாப்பு தொல்லியல் சட்டங்கள்

Report Print Theesan in சமூகம்

போரிற்கு பின்னரான சூழ்நிலையில் வடக்கில் காலூன்றிய வனவளத்திணைக்களமும், தொல்லியல் திணைக்களமும் தமிழ் மக்களின் விடயங்களில் பாரபட்சமாக நடந்து கொள்வதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வவுனியா வடக்கு மருதோடை கிராமஅலுவலர் பிரிவிலுள்ள மீள்குடியேற்றக் கிராமமான காஞ்சூரமோட்டை மற்றும் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம் என்பவற்றிற்கு விஜயமொன்றை மேற்கொண்டதன் பின்னர் அவரால் வெளியிடப்பட்ட ஊடக செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த அரசாங்கம் வவுனியா வடக்கின் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களை ஆக்கிரமித்து பெரும்பான்மையினக் குடியேற்றங்களை செய்துள்ளது. எங்கள் மாவட்டத்திற்கு தொடர்பே இல்லாத பிறமாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் இந்தப்பிரதேசங்களில் குடியேற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறான குடியேற்றங்கள் செய்யப்பட்டபோது பின்பற்றாத வனவளச்சட்டங்கள் தற்போது தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலங்களில் மீள்குடியேறும்போது அவர்களுக்கு எதிராக பிரயோகிக்கப்படுகின்றது.

இந்தியாவிலிருந்து மீளத்திரும்பிய 35 குடும்பங்கள் மருதோடையில் மீளக்குடியேற விருப்பங்கொண்டிருந்தார்கள். அவர்களை மீளக்குடியேற்ற மத்திய மீள்குடியேற்ற அமைச்சின் அனுமதியை பெற்றுக்கொடுத்திருந்தேன்.

அத்துடன் மேலும் குடியேற பலகுடும்பங்கள் விரும்புகின்றன. அவர்களையும் மீளக்குடியேற்றுவதற்கு ஏற்ற ஒழுங்குகள் மத்திய மீள்குடியேற்ற அமைச்சினூடாக செய்யப்பட்டுவருகின்றது.

இவர்களுக்கான வாழ்வாதார திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் வனவளத்திணைக்களம் மீள்குயேற்ற அபிவிருத்தி வேலைகளை தடுத்துள்ளது.

இதேபோன்றே வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் வழிபாடுகளை தொல்லியல் திணைக்களம் தடுத்துள்ளது.

தாங்கள் விரும்பும் இடங்களில் எல்லாம் பௌத்த விகாரைகள் அமைக்க அனுமதி கொடுக்கும் தொல்லியல் திணைக்களம் இந்துக்களின் புராதன ஆலயமான வெடுக்குநாறி மலைக்கு தடை விதித்துள்ளமை இந்த இரண்டு திணைக்களங்களும் தமிழ் மக்களின் விடயத்தில் பாரபட்டசமாக நடந்துகொள்வதை உறுதிப்படுத்துகின்றது.

இவ்வாறான நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான விரிசலை மேலும் அதிகரிக்க செய்யுமே தவிர இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers