வவுனியா விற்பனை நிலையத்தில் இருந்து தரமற்ற போலிக்கம்பிகள் மீட்பு!

Report Print Theesan in சமூகம்

வவுனியா - மன்னார் வீதியிலுள்ள இரும்பகம் ஒன்றில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தரமற்ற பாவனைக்குதவாத போலியாக தயாரித்த 1500 இருப்புக்கம்பிகள் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினரால் இவை மீட்கப்பட்டுள்ளன. இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பொறுப்பதிகாரி சதானந்தசிவம் நிலாந்தன் தலைமையில் மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியிலுள்ள கட்டடப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றினை முற்றுகையிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது 1500 தரமற்ற (SLAS) பொறிக்கப்படாத போலிக்கம்பிகள் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவற்றைக் கைப்பற்றியுள்ளதுடன், 40 வர்ணப்பூச்சுக்கள் அடங்கிய பேணிகளில் விலைகள் காட்சிப்படுத்தப்படவில்லை மற்றும் தெளிவின்மை காரணமாக கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் குறித்த வியாபார நிலையத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாவனையாளர்கள் அதிகார சபையினரால் இரண்டு தடவைகள் தரச்சான்றிதழற்ற முறுக்குக்கம்பிகளை விற்பனை செய்யவேண்டாம் என்று எச்சரிக்கை வழங்கப்பட்டிருந்தது.

“இன்றைய நடவடிக்கையின்போது தரச்சான்றிதழற்ற முறுக்குக்கம்பிகள் வைக்கப்பட்டிருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்துள்ளது அவற்றை நாங்கள் கைப்பற்றியுள்ளோம்.

இதேவேளை, வேப்பங்குளம் பகுதியிலுள்ள அரிசி ஆலை ஒன்றினை முற்றுகையிட்டபோது நுகர்விற்குப் பொருத்தமற்ற மல்லிகள் அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.

அதேபோல் அரிசி பைகளில் விலைகள் தெளிவின்றி காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் அழிக்கப்பட்டிருந்த நிலையிலும் காணப்பட்டுள்ளதாக” அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers