ஏழு தமிழர்களின் விடுதலையும், பின்னால் மறைந்திருக்கும் அரசியலும்!!!

Report Print Murali Murali in சமூகம்

இன்று ஒட்டு மொத்த தமிழர்களின் பார்வையும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பக்கம் திரும்பியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஏனெனில் 28 ஆண்டுகள் சிறையில் தனது வாழ்க்கையை கழித்துள்ள ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யும் முடிவும், பொறுப்பும் ஆளுநரின் கைகளுக்குச் சென்றுள்ளது.

இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் என்ன பதில் சொல்லப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தமிழர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில், 28 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்துவரும் ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பான முடிவை தமிழக அரசே எடுக்க அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் அண்மையில் அறிவித்திருந்தது.

இந்த தீர்ப்பு தமிழக அரசில் தற்போது பெரும் பரபரப்பு நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, நேற்று தமிழக அமைச்சரவை கூடி ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய தீர்மானித்து, ஆளுநருக்கும் பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், தமிழக ஆளுநருக்கு இந்த விடயத்தில் மத்திய அரசு ஆலோசனை வழக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், ஆளுநர் முக்கிய ஆலோசனைகளை நடத்துவார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இது ஒருபுறம் இருக்க தமிழக அரசின் இந்த பரிந்துரைக்கு பின்னால் பல முக்கிய அரசியல் காரணங்கள் இருப்பதாக தமிழக ஊடகங்களும், அரசியல் அவதானிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்த வகையில், தமிழக அரசுக்கு தொடர்ந்து பல விடயங்களில் மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு, காவிரி நீரை கடலில் விட்டது, சேலம் சாலை என்று பல விடயங்களில் மக்கள் அரசுக்கு எதிராக இருக்கிறார்கள்.

இதனால் மக்களிடம் நல்ல பெயர் எடுக்க கடைசி அஸ்திரமாக 7 பேர் விடுதலையை பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும், நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழக சட்ட மன்ற உறுப்பின் ஜெயக்குமார், நாங்கள் முடிவு எடுத்துவிட்டோம், இனி ஆளுநர்தான் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கூறினார்.

இதனால் 7 பேர் விடுதலையில் இனி நடக்கும் விஷயம் அனைத்தும் மத்திய அரசின் முடிவை பொறுத்ததே. ஆகவே, 7 பேரை விடுதலை செய்யவில்லை என்றால் அது மத்திய அரசுக்கு பெரிய அவப்பெயராக மாறும்.

இதனால்தான் ஆளுநரை கைகாட்டிவிட்டு அ.தி.மு.க விலகிக் கொண்டுவிட்டது என்றும் கூறப்படுகிறது. மத்திய அரசு சி.பி.ஐ ரெய்டு மூலம் அ.தி.மு.கவிற்கு நெருக்கடி கொடுத்தது.

ஆனால் அதற்கு பதிலடி தரும் விதமாக 7 பேர் விடுதலையில் முடிவெடுத்து, தமிழக அரசு தற்போது மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது.

இதில் தமிழகத்திற்கு ஆதரவான முடிவை எடுத்தால் பிற மாநிலங்களிலும், எதிரான முடிவை எடுத்தால் தமிழகத்திலும் கடும் எதிர்ப்பை சந்திக்கும் சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளது மத்திய அரசு.

இதேவேளை, தமிழக அரசியலில் எப்போது வேண்டுமானாலும் புயல் வீசும் என்ற நிலைதான் உள்ளது. 18 சட்ட மன்ற உறுப்பினர்கள் தீர்ப்பு வந்தால், ஆட்சி கவிழ கூட வாய்ப்புள்ளது.

அத்துடன், 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்திற்கு தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். அந்த சமயத்தில், இந்த 7 பேர் விடுதலை முக்கிய துருப்புசீட்டாக பயன்படும் என்று அ.தி.மு.க நினைக்கிறது.

Latest Offers