நான்கு பேர்ச்சஸ் காணியிலும் கட்டடங்கள் அமைக்கலாம்: மாநகரசபையில் தீர்மானம்

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் கட்டடங்கள் அமைப்பதற்கு ஆகக்குறைந்தது 6 பேர்ச்சஸ் பரப்பளவு கொண்ட காணி இருக்க வேண்டும் என இதுவரை இருந்த ஏற்பாட்டினைத் திருத்தி நான்கு பேர்ச்சஸ் காணியிலும் கட்டடங்கள் அமைக்கலாம் என மாநகர சபையால் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.

கடந்த சபை அமர்வில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு நகருக்குள் இடப்பற்றாக்குறைகள் அதிகரித்து வருவதால் தம்மிடமுள்ள காணிகளின் பரப்பளவுக்குள் கட்டடங்களை அமைக்க முடியாமல் உள்ளதாக பொதுமக்கள் சிலர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய கடந்த 9வது மாநகரசபை அமர்வின் போது என்னால் கொண்டுவரப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில் சபையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

முன்னர் மாநகர எல்லைக்குள் கட்டடங்கள் அமைப்பதற்கு ஆகக்குறைந்தது 6 பேர்ச்சஸ் பரப்பளவு கொண்ட காணி இருக்க வேண்டும். ஆனால் தற்காலத்தின் சனநெரிசல், பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் பொருளாதார, சமூக நலனைக் கருத்திற்கொண்டு கட்டடம் கட்டுவதற்காக அனுமதிக்கப்படும் ஆகக்குறைந்த காணி பரப்பளவு 04 பேர்ச்சஸ் ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தீர்மானத்திற்கான வர்த்தமாணி வெளியிடப்பட்டதும் மாநகர எல்லைக்குள் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers