பொலிஸாருக்கு எதிராக பாரிய போராட்டம்! முடங்கியது வவுனியா

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா கனகராயன் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று கனகராயன்குளம் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் இன்று கனகராயன்குளம் வர்த்தக சங்கம், பொது அமைப்புக்கள், கிராம மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கடந்த ஞாயிற்றுக்கிழமை சிவில் உடையில் சென்று இரண்டு சிறுவர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் மேல் கொலை வெறி தாக்குதல் நடத்தியமை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கொத்து ரொட்டிக்காகவா சிறுமி வயிற்றில் குத்தினீர்கள்,பொலிஸின் சிறப்பு பயிற்சியை சிறுவர் மீது காட்டாதே, ஏழைகளின் சொத்துக்களை ஏப்பம் விடாதே, கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை உடனடியாக மாற்று போன்ற கோசங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொண்டிருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை புளியங்குளம், ஓமந்தை மற்றும் கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டதுடன் வவுனியாவிலிருந்து பேருந்து மூலம் விசேட பொலிஸ் அணியினரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த போராட்டம் காரணமாக போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த வவுனியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ்.தென்னக்கோன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார். இதன்போது, கருத்து வெளியிட்டுள்ள அவர்,

குறித்த குடும்பத்தின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் முடிவில் அவருக்கான தண்டனை வழங்கப்படும் என்று சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன் மற்றும் பொதுமக்கள், கனகராயன்குளம் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.