கிளிநொச்சி மாவட்டத்தில் பொலிஸார் மற்றும் பொலிஸாரின் பின்னணியுடன் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருவதாக இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இரணைமடு விவசாய சம்மேளத்தினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று பகல் 10.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் விவசாய பிரதிஅமைச்சர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதில் விவசாயிகளினுடைய பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், மாவட்டத்தில் எதிர்கொள்கின்ற சவால்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக்குளத்திலிருந்து ஊரியான் வரைக்குமான கனகராயன் ஆற்றுப்பகுதியில் தொடர்ந்தும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இதனால் பெருமளவான வளங்கள் அழிவடைவதுடன், வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டு வருவதாக இரணைமடு விவசாயிகள் சம்மேளத்தின் தலைவர் மு.சிவமோகன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில் இவ்வாறான சட்டவிரோத மணல்அகழ்வுகளால் விவசாய நிலங்களும், ஆற்றுப்படுக்கைகளும் வீதிகளும் சேதமடைந்து வருகின்றன.
இவ்வாறான செயற்பாடுகள் முற்றுமுழுதாக பொலிஸார் மற்றும் பொலிஸாரின் துணையுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுடிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக, இவ்வாறான மணல்அகழ்வுகள் தொடர்பில் பொலிஸாருக்கு பலதடைவை தெரியப்படுத்தியபோதும் அவரகள் இந்த விடயத்தில் அக்கறை கொள்ளாது இவ்வாறான சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கு துணைபோகின்றனர் எனக்குறிப்பிட்டனர்.
இது தொடர்பில் பதிலளித்த கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பொலிஸ் பொறுப்பதிகாரி கடந்த மூன்று வார காலத்திற்கு முன்னர்தான் இவ்வாறான பொறுப்பை ஏற்றிருப்பதாகவும், குறிப்பிட்ட கலத்திற்குள் இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தன்னாலான முழு முயற்சிகளை எடுப்பதாகவும், இவ்வாறான மணல் அகழ்வுகள் தொடர்பில் உடனடியாக தங்களுக்கு அறியத்தருமாறும் தெரிவித்துள்ளார்.