முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பான செய்திகளை சேகரிக்க ஊடகவியலாளர்களை நீதிமன்றத்திற்குள் நுழைய தடை விதித்து குருணாகல் மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர இன்று உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை சதொச நிறுவனத்தின் குருணாகல் யந்தம்பலாவ கிளையில் பொருட்களை பெற்று அதற்கான பணத்தை செலுத்த தவறியமை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
வழக்கு தொடர்பான செய்தியை சேகரிக்க ஊடகவியலாளர்கள் நீதிமன்றத்திற்கு செல்ல முயற்சித்த போது, அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸார் ஊடகவியலாளர்களை தடுத்து நிறுத்தினர்.
குருணாகல் பிரதேச ஊடகவியலாளர்கள் குருணாகல் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணை தொடர்பான செய்திகளை சேகரிக்க தடைவிதிக்கப்பட்டமை இதுவே முதல் முறையாகும்.
இந்த வழக்கு இன்று முதல் தொடர்ந்தும் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது பிரத்தியேக செயலாளர் மொஹமட் ஹக்கீர், சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக சட்ட மா அதிபர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.