போதைப்பொருள் கடத்திச் சென்ற வான் மீது துப்பாக்கிச் சூடு! இருவர் வைத்தியசாலையில் அனுமதி

Report Print Aasim in சமூகம்

கண்டியில் இருந்து குருநாகலைக்கு போதைப் பொருள் கடத்திய கும்பல் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

கண்டி - திகணையில் இருந்து வேன் ஒன்றில் குருநாகலைக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேகத்துக்கு இடமான வேன் ஒன்றை நிறுத்தி சோதனையிட முயன்றுள்ளனர்.

எனினும் குறித்த வேன் பொலிஸாரின் உத்தரவை மீறி வேகமாக தப்பிச் செல்ல முற்பட்ட நிலையில், பொலிஸார் வேனை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதன்போது வேனில் பயணித்த மூவர் வாகனத்தைக் கைவிட்டு தப்பியோட முற்பட்டுள்ளனர். எனினும் பொலிஸார் வேகமாக செயற்பட்டு சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு காரணமாக சந்தேக நபர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், வேன் மோதியதன் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர்கள் குருநாகல் மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.