பாலையடிவட்டை பொதுச்சந்தையை மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை

Report Print Rusath in சமூகம்
33Shares

மட்டக்கப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட பாலையடிவட்டைக் கிராமத்தில் அமைந்துள்ள பொதுச்சந்தையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் யோகநாதன் ரஜனி தெரிவித்துள்ளார்.

பாலையடிவட்டையில் கடந்த 1990ம் ஆண்டு காலத்தில் பாரியதொரு பொதுச்சந்தை காணப்பட்டது. அக்காலத்தில் அச்சந்தையில் தமிழ், முஸ்லிம், மற்றும் சிங்கள மக்களும் ஒன்றுகூடி வியாபாரங்களை மேற்கொண்டு வந்த நிலையில் அக்காலத்தில் ஏற்பட்ட யுத்த சூழல் காரணமாக அந்த சந்தைத் தொகுதி வியாபாரம் விடுபட்டு அதற்குரிய கட்டடங்களும் அழிக்கப்பட்டன.

இதனால் அப்பகுதி மக்களின் வியாபார கேந்திர நிலையமாகக் காணப்பட்ட சந்தை தொகுதி இல்லாமல் போனதுடன் இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த உறவுகளும் விரிசலடைந்தன.

பின்னர் பொதுச்சந்தைக்குரிய அந்தக் காணியில் இலங்கை இராணுவம் தற்போதுவரைக் நிலை கொண்டிருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அக்காணியிலிருந்து இராணுவம் வெளியேறாத நிலையில் அக்காணிக்கு சற்று அண்மையிலுள்ள காணியில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்தஜரகாந்தனின் (பிள்ளையான்) முயற்சியினால் புதிதாக சந்தைத் தொகுதி கட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இப்புதிய சந்தைக் கட்டடம் அமைக்கப்பட்டு சிலகாலம் மாத்திரமே அதில் வர்த்தக நடிவடிக்கைகள் இடம்பெற்றன. பின்னர் மீண்டும் அந்த சந்தை வியாபாரமும் இல்லாமல் போய்விட்டது.

போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் கீழ் உள்ள இந்த பொதுச்சந்தைத் தொகுதியை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வந்து அப்பகுதி மக்களின் உற்பத்திகளை விற்பனை செய்யும் இடமாக மாற்ற வேண்டும் என்ற நோக்குடன் தற்போது அப்பிரதேசத்தின் தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய தவிசாளர் யோகநாதன் ரஜனி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

அதற்கிணங்க இன்றைய தினம் புற்கள் நிரம்பிக் காணப்பட்ட அப்பொதுச் சந்தை வளாகம் அப்பகுதி மக்களைக் கொண்டு சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் எதிர்வரும் வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு மீண்டும் பாலையடிவட்டை பொதுச்சந்தை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இதில் வியாபாரிகள், பொதுமக்கள், உள்ளிட்ட அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாகவும் தவிசாளர் மேலும் தெரிவித்துள்ளார்.