கபடியில் தேசிய மட்டத்தில் சாதித்த கிளிநொச்சி

Report Print Arivakam in சமூகம்

பாடசாலை மாணவர்களுக்கிடையிலான தேசிய மட்ட கபடிப்போட்டியில் கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் 17 வயதுப் பெண்கள் அணி முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும், 20 வயதுப் பெண்கள் அணி மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்திருப்பது அளப்பெரும் சாதனையாகும்.

இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டுக்குப் பின்னர் கபடி என்றால் சிவநகர் தான் என்கின்ற பெயரை கிளிநொச்சி மாவட்டத்தில் நிலைநாட்டிய இப்பாடசாலை மாணவர்கள் பதினைந்து ஆண்டுகளைக் கடந்து அதே பெயரை தேசிய ரீதியில் நிலைநாட்டி எமது மாவட்டத்திற்கும், வடக்கு மாகாணத்திற்கும் கௌரவத்தை தேடித்தந்திருப்பது வரலாற்றுப் பதிவாகும்.

கோட்டம், மாவட்டம், மாகாணம் என்ற படிநிலைகளை தாண்டி எமது மாணவர்கள் தேசிய மட்ட போட்டிகளில் பங்குபற்றுவதே சவால் நிறைந்த விடயமாக இருக்கின்ற நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பொருளாதார நெருக்கடி நிறைந்த உருத்திரபுரம், சிவநகர் பகுதியில் அமைந்துள்ள கிராமப்புற பாடசாலையின் மகளிர் அணி இவ்வருடம் நடைபெற்ற கிரீடா சக்தி தேசிய மட்ட கபடி போட்டியில் 2ம் இடத்தைப் பெற்றிருந்ததோடு நேற்று முன்தினம் நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான தேசிய மட்ட கபடிப் போட்டியில் 'மகாவலி தேசிய பாடசாலை' அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பௌதீக வளத்தேவைகளோடு பயிற்சிகளை மேற்கொள்வதற்கான நவீன வசதிகளுடன் கூடிய மைதானம் கூட இல்லாத நிலையில், வறுமையும், வலிகளும் எமது திறமைக்குத் தடையல்ல என்பதை நிரூபித்து 'கபடி என்றால் சிவநகர்' தான் என்ற மகுடத்தை மீண்டுமொருமுறை தேசிய ரீதியில் நிலைநாட்டியுள்ள வீராங்கனைகள், பயிற்றுவிப்பாளர்கள், பெற்றோர்கள், பாடசாலைச் சமூகத்தினர் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தேசிய ரீதியில் தங்கம், மற்றும் வெண்கலப்பதக்கம் வென்ற சிவநகர் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவிகளுக்கு நேரில் சென்று வாழ்த்துத்தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.