போரின் பின்னரான காலப்பகுதியில் மக்கள் இதுவரை மீள் எழுச்சி பெறவில்லை

Report Print Yathu in சமூகம்

“போரின் பின்னரான காலப்பகுதியில் மக்கள் இதுவரை மீள் எழுச்சி பெறவில்லை. எனவே மக்களின் மீள் எழுச்சி வாழ்வாதார அம்சங்களிலும் மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சு கவனம் செலுத்த வேண்டும்” என வடமாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் மீள்குடியேற்ற புனர்வாழ்வு இந்து சமய விவகார அமைச்சர் D.M சுவாமிநாதனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சியில் தீயணைப்பு சேவையொன்றை ஆரம்பித்து வைத்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தை குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு மாற்றங்கள் எதுவும் இதுவரை இல்லை.

மக்கள் இன்னும் தங்கி வாழும் நிலையிலேயே உள்ளனர். எனவே இந்த நிலையிலிருந்து மக்களை மீட்டெடுக்கும்வகையிலான செயற்றிட்டங்கள் புனர்வாழ்வு அமைச்சினால் முன்னெடுக்கப்படுவது அவசியம் என்றும், முழுமையான ஒரு சமூக மாற்றத்திற்கான வேலைத்திட்டங்களை மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சு எதிர்காலத்தில் உருவாக்கி அதனையும் வெற்றிகரமாக செயற்படுத்த வேண்டும்.

இதுவரை மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டங்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்வதாகவும் அவர் இதன் போது கூறியுள்ளார்.