மாவீரர் துயிலுமில்லத்தை மீள் நிர்மாணிப்பு செய்யுமாறு வேண்டுகோள்

Report Print Nesan Nesan in சமூகம்

துயிலுமில்லங்களை புனரமைத்து நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவீரர் துயிலுமில்ல மீள் நிர்மாணிப்பு செயற்பாட்டுக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் நேற்று மாலை இடம்பெற்ற பிரத்தியேக சந்திப்பின் போது செயற்பாட்டுக்குழுவின் சார்பில் கணேசன் பிரபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 2017ம் ஆண்டு, மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தரவை மாவீரர் துயிலுமில்லம் மற்றும் மாவடிமுன்மாரி துயிலுமில்லம் ஆகிய இரண்டு துயிலுமில்லங்களை மிகவும் சிரமத்தின் மத்தியில் மக்களிடம் சேகரிக்கப்பட்ட பணத்தின் மூலமாக மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை செய்திருந்தோம்.

அந்தவகையில் கடந்த வருடம் பந்தம் கொழுத்துவதற்காக காட்டில் தடிகள் வெட்டியே பயன்படுத்தியிருந்தோம். ஆனால் இம்முறை கம்பிவளைத்து தீப்பந்தங்கள் செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.

அதன் பிரகாரம் நினைவேந்தல் நிகழ்வு செய்வதற்கும் முதற்கட்ட துப்பரவுப்பணி முன்னெடுப்பதற்கும் எவரும் முன்வராத ஒரு துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

ஆகையினால் தேசவிரோத சக்திகள் இதனை சாதகமாக கையிலெடுத்து துயிலுமில்ல நினைவேந்தல் நிகழ்வுகளை செய்வதற்கு ஏதுவான சூழ்நிலை காணப்படுகின்றது.

புலம்பெயர் தேசத்தின் உறவுகள் துயிலுமில்லங்களை புனரமைத்து நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

அத்துடன் எதிர்வரும் 15ஆம் திகதி காலை தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் முதற்கட்ட சிரமதானப்பணிகள் அப்பிரதேச மக்களைக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.