ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் காணப்படுகின்ற கூடாரத்தை அகற்றுமாறு கோரிக்கை

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் காணப்படுகின்ற கூடாரத்தை அகற்றுமாறு திருகோணமலை விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தங்களது காணாமல் ஆக்கப்பட்டோரை தேடித்தருமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுட்டனர்.

தற்போது கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டுள்ள நிலையில் கூடாரம் அகற்றப்படாமல் இருப்பதாகவும், இரவு நேரங்களில் கூடாரத்துக்குள் இளைஞர்கள் மது அருந்துவதாகவும் விளையாட்டு வீரர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

விளையாட்டின் மூலம் இன ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் திருகோணமலையில் வசித்து வரும் மூவின விளையாட்டு வீரர்களும் ஒற்றுமையாக விளையாடும் இம் மைதானத்துக்கு அருகில் மறைந்து கூடாரத்துக்குள் மது அருந்திவிட்டு இன முறுகலை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு வருகின்ற வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கூடாரத்தை பார்த்துவிட்டு சமூக சீர்கேடுகள் நடை பெறுவதற்கு வழிவகுக்கும் இடமாக இக் கூடாரம் காணப்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

எனவே கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அமைக்கப்பட்ட இக்கூடாரத்தினை அப்புறப்படுத்துமாறும் விளையாட்டு வீரர்கள் குறிப்பிடுகின்றனர்.