தமிழ் மக்கள் பிரதிநிதிகளை நம்பி அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளோம் என தெரிவித்துள்ள தமிழ் அரசியல் கைதிகள், வாக்கு தேவைக்கு மட்டுமே எம்மை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேசிய சிறைக்கைதிகள் தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் தமது ஆதங்கத்தினை தம் உறவுகளிடம் பகிர்ந்துள்ளனர்.
அவர்கள் தமது தற்போதைய நிலை தொடர்பாக தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சிறைச்சாலைக்கு வந்து ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகின்றது. இன்று வரை யாரும் எம்மை வந்து பார்த்ததாகவோ, எமது விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுத்ததாகவோ இல்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதாந்தம் நாடாளுமன்ற அமர்வுக்கு கொழும்புக்கு வந்து செல்கின்றனர். அவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைகளை கடந்தே கொழும்புக்கு செல்கிறார்கள்.
செல்லும் வழியில் கூட எம்மை வந்து பார்க்கவில்லை, எமது நிலைப்பாடுகள் தொடர்பில் அறிவதற்கு முயற்சிக்கவில்லை.
இதனால் சிறைச்சாலை நிர்வாகமும் எம்மை கண்டுகொள்வதாக இல்லை, எம்மீது கரிசனை கொள்ளாமல் மதிப்பில்லாமல் நடத்துகிறார்கள்.
அரசியல் கைதிகளாகிய நாம் போதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் ஒரே சிறை அறையில் இருப்பதாக பல தடவை எமது மக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவித்திருந்தோம். அது தொடர்பில் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொடர்பான சிறப்பு அமர்வு தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
அதில் தடுத்துவைக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசேட பரிந்துரை ஒன்று கையளிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அங்கு சென்று உரையாற்றவுள்ளார்.
அவர் படையினரை காப்பற்றுவதற்காக நேரடியாக செல்கிறார். இந்த நிலையிலாவது எமக்கு சார்பாக பேசுவதற்கு எமது மக்கள் பிரதிநிதிகள் செல்ல வேண்டும்.
யாரும் அங்கு சென்று எமக்கு சார்பாக பேசுவதற்கு தயாரா இல்லை. இந்த இறுதி சந்தர்ப்பத்தை தவறவிடாது எமது பிரதிநிதிகள் ஜெனீவாக்கு சென்று பேச வேண்டும்.
25 வருடங்களுக்கு மேலாக தண்டனை அனுபவிக்கு எம்மை பற்றி கதைப்பதற்கு எமது பிரதிநிதிகள் தயாராக இல்லை. வாக்கு தேவைக்கு மட்டும் எம்மை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்.
தேர்தல் நெருங்கும் போதும் போராட்டங்கள் மேடைப்பேச்சுக்களில் மட்டும் எமது போராட்டம் தியாகம் தொடர்பில் பல அறிக்கைகளும் கருத்துக்களும் வெளியிடுகிறார்கள்.
ஆனால் போராட்டங்களுக்கு காரணமாக இருந்த எமது விடுதலை பற்றி சிந்திப்பதற்கு தயாராக இல்லை. புலம்பெயர் உறவுகளின் ஊடாக சட்ட உதவிகள் சில கைதிகளுக்கு தான் கிடைக்கின்றது.
ஏனைய கைதிகளுக்கு கிடைப்பதற்கான ஒழுங்கை கூட எமது பிரதிநிதிதிகள் செய்வதாக தெரியவில்லை. எமது குடும்பங்களை கவனிப்பதற்கும் யாரும் முழு முயற்சி எடுக்கவில்லை.
நாம் உண்ணாவிரதம் இருந்தால் மட்டும் தம்மை விளம்பரப்படுத்தி கொள்வதற்கு எம்மிடம் வருகிறார்கள்.
மக்களி பிரதிநிதிகளின் நடவடிக்கை தொடர்பில் அரசியல் கைதிகளாகிய நாம் மிகவும் மன வேதனையுடனும் தாக்கத்துடனும் உள்ளோம்.
எம்மை விற்று பிழைப்பு நடத்துகிறார்கள் என்பதை வெளிப்படையாக தெரிவித்து கொள்கின்றோம். நாம் அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டு விட்டோம்.
இதனால் ஆதங்கம் மன கவலை மட்டுமே தற்போது எம்மிடம் உள்ளது” என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.