சிறுமியை யுவதியாக்கி வெளிநாட்டிற்கு அனுப்பிய நபர்! விசாரணையில் வெளியான தகவல்கள்

Report Print Murali Murali in சமூகம்

கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவரை 21 வயது யுவதி என போலி கடவுச்சீட்டில் வெளிநாட்டுக்கு அனுப்பிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2013 ஜனவரி 09ம் திகதி, சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்குள்ளான சிறுமி ரிசானா நபீக்கை போலி ஆவணங்கள் ஊடாக வெளிநாட்டுக்கு அனுப்பிய அதே முகவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருவளையைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி ஆவணங்களை தயாரித்து, அதன் ஊடாக செல்லுபடியற்ற கடவுச்சீட்டை தயாரித்து சிறுமி ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பியமை தொடர்பில் தண்டனை சட்டக் கோவையின் 360 ஈ, குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 45 (2) ஆம் பிரிவுக்கு அமைவாக அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, CID யினர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி சந்தேகநபர் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய நாளை (13) வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்திலிருந்து கடந்த மார்ச் 04 ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியுள்ள பெண் ஒருவர் தொடர்பில் எழுத்துமூலமான முறைப்பாடொன்று வழங்கப்பட்டிருந்தது.

ஓமான் தூதரகத்தில் தஞ்சமடைந்த தற்போது 18 வயதுடைய, கிண்ணியா பகுதியைச் சேர்ந்த அப்துல் மஜீத் சேகு அப்துல் காதர் ரிஹானா என்பவர் குறித்தே அதில் குறிப்பிடப்பட்டிருந்துள்ளது.

இதனையடத்து, குறித்த பெண்ணிடம் மேலதிக வாக்குமூலம் ஒன்றினைப் பெற்று அனுப்புமாறு CID யினர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய, கடந்த மார்ச் 10ம் திகதி, அவரிடம் மேலதிக வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.

அச்சிறுமியிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் அடிப்படையில், அவர் 10 வயது சிறுமியாக இருந்த போது சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டமை தெரியவந்துள்ளது.

குறித்த வாக்குமூலத்திற்கு அமைவாக, கடந்த வருடம் (2017) ஜூலை 10ம் திகதி இறுதியாக அந்த பெண் மருதானையிலுள்ள வேலை வாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றின் ஊடாக வெளிநாட்டுக்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் உப முகவரான பெண் ஒருவர், கடந்த 2010ல் தன்னையும் மேலும் நான்கு சிறுமிகளையும் வெளிநாட்டுக்கு அனுப்பும் நோக்குடன் கொழும்புக்கு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றுக்கு தன்னை அழைத்து வந்ததாக பாதிக்கப்பட்ட பெண் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

தங்களை பெயர், முகவரி தெரியாத நபர் ஒருவரிடம் அழைத்து சென்றதாகவும், அதன் பின்னர் அவரின் ஆலோசனைப் படி தங்குமிடமொன்றில் தங்கியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது, கடவுச்சீட்டொன்றை (896416758V எனும் அடையாள அட்டை இலக்கத்தைக்கொண்ட கடவுச்சீட்டு) தனக்கு தந்ததாகவும் அதில் தனது புகைப்படம் பெயர் என்பன இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அதில் அவரது பிறந்த திகதி 1989.05.20 என குறிப்பிடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் பாதிக்கப்பட்ட யுவதியியின் உண்மையான பிறந்த திகதி 2000.11.15 எனவும், இந்த கடவுச்சீட்டை அவர் பெறும்போது அவருக்கு 10 வயது எனவும் CID யினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

போலி பிறப்புச் சான்றிதழ் ((1762 இலக்கம்) போலி அடையாள அட்டை (896416758V) ஆகியவற்றை வைத்தே போலிகடவுச்சீட்டும் (N4152293) பெறப்பட்டுள்ளதை CID யினரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அதன்படி குறித்த பெண், 2010.08.10 ஆம் திகதி 10 வயது சிறுமியாக இருந்த போது சவூதி அரேபியாவுக்கு போலி கடவுச்சீட்டின் மூலம் வீட்டுப் பணிப் பெண்ணாக அனுப்பப்பட்டுள்ளதோடு, அங்கு அவர் இரு வருடங்கள் பணிபுரிந்த நிலையில் நாடு திரும்பி மீண்டும், குவைத்துக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளமை தெரிய வந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாதாரண விசாவில் துபாய் சென்ற குறித்த சிறுமி, துபாயிலிருந்து பெண் ஒருவர் மூலம் வாகனமொன்றில் ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள மற்றுமொரு பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் ஓமானிலுள்ள குறித்த பெண் அச்சிறுமியை பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

ஓமானில் வீட்டுப் பணிப் பெண்ணாக இருந்த வேளையில் அங்கு இடம்பெற்ற கொடுமைகளை சகிக்க முடியாமல் சிறுமி இரண்டு தடவைகள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள நிலையில், இறுதியாக ஓமானிலுள்ள தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

அதன் அடிப்படையில், மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, சந்தேகநபரான குறித்த முகவர் CID யினால் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குறித்த நபர் இதற்கு முன்னர் சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சிறுமி ரிஸானா நபீக்கை, போலி ஆவணங்கள் ஊடாக சவூதிக்கு அனுப்பியவர் என, சி.ஐ.டி. விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

1988 பெப்ரவரி 04 இல் பிறந்த கிண்ணியா, மூதூரைச் சேர்ந்த ரிஸானா நபீக்கை அவரது 17 ஆவது வயதில் (2005 மே 04) அவர் 1982.02.02 இல் பிறந்தவர் என தெரிவித்து போலி கடவுச்சீட்டு மூலம் பணிப் பெண்ணாக சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

கடந்த 2005 மே 22 இல், ரிசானா, வீட்டு எஜமானியின் குழந்தைக்கு போத்தலில் பாலூட்டிக் கொண்டிருந்த வேளையில், குழந்தை மூச்சுத் திணறி இறந்துள்ளது.

இதனையடுத்து சுமார் 8 வருடங்களாக இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர், கடந்த 2013 ஜனவரி 09 ஆம் திகதி ரிசானா நபீக் மரண தண்டனைக்குள்ளானார்.