திருமணத்திற்கு முன் கொழும்பு சென்ற மணமகனின் நிலை! மணப்பெண்ணுக்கு ஏற்பட்ட சங்கடம்

Report Print Vethu Vethu in சமூகம்

திருமணத்திற்கு 4 நாட்களுக்கு முன்னர் கொழும்பிற்கு சென்ற இளைஞன் காணாமல் போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மத்துகம ஓவிட்டிகல பிரதேசத்தை சேர்ந்த தேனுக ருச்சிரங்க வித்தான என்ற இளைஞனே 9 நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார்.

அவர் 9 நாட்களின் பின்னர் தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளதாக மேல் மாகாண புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியியலாளராக பணியாற்றும் இளைஞன், கடந்த 6ஆம் திகதி திருமணத்திற்கு தேவையான பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக கொள்ளுப்பிட்டிக்கு சென்றுள்ளார்.

அவர் தனது பணிகளை முடித்துக் கொண்டு மீண்டும் மத்துகம செல்வதற்காக புறக்கோட்டை தனியார் பேருந்து நிலையத்திற்கு இரவு 7 மணியளவில் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொழும்பில் இருந்து மத்துகம நோக்கி பயணிக்கவிருந்த சொகுசு பேருந்தில் அவர் ஏறியுள்ளார். சற்று நேரத்தில் அவருக்கு கடுமையான தண்ணீர் தாகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார். இதனையடுத்து அவர் காணாமல் போயுள்ளார்.

கொழும்பு சென்ற மகன் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என கூறி தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த இளைஞனுக்கு அலுவலகத்தில் வழங்கப்பட்ட கையடக்க தொலைபேசி மத்துகம, கொழும்பு பேருந்து ஆசனத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை குறித்த இளைஞன் பொலிஸ் நிலையத்திற்கு செல்லும் போது அவரது பணப்பை மற்றும் தொலைபேசி காணாமல் போயிருந்த நிலையில் காற்சட்டை ஒன்றையும் அவர் அணிந்திருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளைஞனிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தனக்கு ஒன்றும் நினைவில் இல்லை என குறித்த இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இளைஞனுக்கு யாரோ ஒருவர் உணவு வழங்கியுள்ளனர். அந்த உணவில் ஏதோ ஒருவகை இரசாயனம் கலக்கப்பட்டுள்ளது. அதனை உட்கொண்ட பின்னர் அவருக்கு அதிகமான தாகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பேருந்தில் இருந்து அவர் இறங்கியுள்ளார். இறங்கிய பின்னர் அவரிடம் இருந்த பணம் உட்பட அனைத்து பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அவர் ஒரு வைத்தியரை திருமணம் செய்யவிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார். இது குறித்து பல ஊடகங்களில் பல்வேறு விதமாக விமர்சிக்கப்பட்டது.

எனினும் தற்போது குறித்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.