சுகாதார சேவையில் இனவாதமா? துறைசார் அமைச்சர் விளக்கம்

Report Print Rusath in சமூகம்

உன்னதமான சுகாதார சேவையில் ஒரு போதும் இனத்துவேசம் இருக்க முடியாது, எவராவது இலங்கை சுகாதாரத்துறையில் இனத்துவேஷம் காட்டப்படுவதாக கூறுவார்களாயின் உண்மையில் அப்படி கூறித்திரிபவர்களே இனவாதிகள் என சுகாதார சேவைகள் பிரதியமைச்சர் பைசல் காசீம் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறையில் உள்ள வைத்தியர் பற்றாக்குறைகள் பற்றித் தொடர்பு கொண்டு கேட்டபோது இன்று கருத்து வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளுக்கு போதியளவு வைத்தியர்களைக் கொண்டிருப்பது என்பது மிகவும் பெரிய பிரச்சினையாக உள்ளது.

வருடாந்தம் பயிற்சி பெற்று தகைமையுடன் வெளியேறும் 1200 வைத்தியர்களில் சுமார் 200 வைத்தியர்கள் நாட்டு மக்களுக்குச் சேவையாற்றாமல் மாயமாகி விடுகின்றனர்.

இதற்கு பலதரப்பட்ட காரணங்கள் இருக்கின்றன. எஞ்சிய 1000 வைத்தியர்களையே நாடு பூராகவும் உள்ள வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் நிலைமை காணப்படுகின்றது.

இதில் வைத்தியர் சங்கம் தலையீடு செய்து தங்களது கருத்துக்களையும் முன்வைத்து செயற்படுகின்றது.

தற்சமயம் நாடு பூராகவும் உள்ள 150 ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையங்களில் வைத்தியர்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது.

இந்த நிலைமையில்தான் நாங்கள் இருந்து கொண்டு இருக்கின்றோம். இத்தோடு சேர்ந்ததாக வைத்திய நிபுணர்கள் பிரச்சினையும் காணப்படுகின்றது.

நாட்டிலே காணப்படுகின்ற வைத்திய நிபுணர்களின் எண்ணிக்கை இரண்டாயிரமாகும். பொதுவாகவே இந்த வைத்திய நிபுணர்களில் பெரும்பாலானோர் வசதி வாய்ப்புக்களுடன் கூடிய நகர்ப்புற வைத்தியசாலைகளில் பணியாற்றவே விரும்புகின்றனர். இது பெரிய சவாலாகவுள்ளது.

உண்மையில் இந்த விடயத்தில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கு நாமெல்லோரும் நன்றி சொல்ல வேண்டும். வைத்திய நிபுணர்களை கூடுதலாக உருவாக்குவதற்கு சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி அவர் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றார்.

சுகாதார அமைச்சராக அவர் பொறுப்பேற்றதிலிருந்து மிகவும் வறிய மக்களைக் கருத்திற் கொண்டு அவர்களுக்கு சிறந்த சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்பட்டு வருகின்றார்.

ஏற்கெனவே புற்றுநோய்க்கான 48 மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது மீண்டும் 24 மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அது மாத்திரமின்றி புற்றுநோய் ஏற்பட்ட ஒருவருக்கு ஏற்கெனவே 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான மருந்துகளே கொடுக்கப்பட்டன.

ஆனால் தற்போது புற்றுநோயாளி ஒருவர் இறக்கும் வரையில் அவருக்கு 100 இலட்சமாயினும் அதற்கு மேலாயினும் மட்டுப்படுத்தப்படாத அளவில் மருந்துகள் வழங்கி சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றன.

சுகாதார அமைச்சும், நல்லாட்சியும் என்ன செய்து கொண்டு இருக்கின்றது என்ற கேள்விக்கு இதுதான் சிறந்த பதிலாகும்.

இப்பொழுது மீண்டும் தேர்தலை எதிர்பார்த்தவர்களாக ஒருசில அரசியல்வாதிகள் இனத்துவேசம் இனவாதம் என்பவற்றை வெளிப்படுத்துவதில் போட்டி போட்டுக் கொண்டு களமிறங்கியிருக்கின்றனர்.

அவர்கள், என்னையும் விட்டுவைக்கவில்லை, நானும் ஒரு இனவாதியென்று கற்பனை செய்து என்னையும் பலவழிகளிலும் இனவாதியென சித்தரித்து வருகின்றனர்.

நான் மூன்றரை வருடமாக பிரதி அமைச்சராக இருக்கின்றேன். இதில் நான் எந்தவித பாகுபாடுகளுமின்றி நாட்டு மக்களுக்குச் சேவையாற்றி வருகின்றேன். சுகாதார சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதில் இனவாதம் என்பது கேவலமான ஒரு சிந்தனையாகும்.

இன, மத, பேதம் பார்த்து ஒருவரை நோய்கள் பீடிப்பதில்லை. அனைத்து பிரதேசங்களிலும் அந்தந்தப் பிரதேச மக்களினால் வேண்டுகோள் விடுக்கப்படுகின்ற உதவிகளை என்னால் முடிந்தளவு செய்து கொடுத்து வருகின்றேன்.

இதில் பாகுபாடு ஏதுமில்லை. பிரதேச வாதம் இனவாதம் என்பது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் என் சிந்தனையிலும் செயற்பாட்டிலும் வெளிப்பட்டதேயில்லை. அதுவொரு கீழ்த்தரமான எண்ணப்பாடாகும். இனவாதிகள் இதனை விளங்கிக் கொண்டு தம் செயற்பாடுகளுக்குத் தாங்களே வெட்கித் தலைகுனிய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.