மோட்டார்சைக்கிளில் மகனை ஏற்றிச் சென்ற கர்ப்பிணிப் பெண்! இறுதியில் நடந்த விபரீதம்

Report Print Manju in சமூகம்

மோட்டார்சைக்கிளில் பயணம் செய்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் விபத்திற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஆராச்சிக்கட்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கடந்த முதலாம் திகதி ஆராச்சிக்கட்டுவ - அடிப்பல வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் கடந்த எட்டாம் திகதி இரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆராச்சிக்கட்டுவ, போப்பன்கம பிரதேசத்தை சேர்ந்த யமுனா ருவந்தி (28 வயது) என்ற கர்ப்பிணிப் பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் தனது 8 வயது மகனை மோட்டார்சைக்கிளில் ஏற்றிச் சென்று கொண்டிருந்த போது மதுபோதையில் வந்த நபரொருவரின் மோட்டார்சைக்கிள் மோதியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த மகனும், தாயும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் வைத்து பெண்ணின் வயிற்றில் இருந்த 8 மாத பெண் சிசு உயிரிழந்துள்ளது.

அதன்பின் தாயும், மகனும் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக சிலாபம் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் கடந்த எட்டாம் திகதி இரவு குறித்த பெண் கொழும்பு வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளார்.

எனினும் கடும்காயங்களுக்கு உள்ளான சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்துக்கு காரணமான குறித்த நபரை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபரிடம் வாகன ஓட்டுநருக்கான அனுமதிப் பத்திரம் இல்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers