தமிழர் பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூடுகள்!! அச்சத்தில் மக்கள்

Report Print Ashik in சமூகம்

மன்னார் 'சதொச' வளாகத்தில் நேற்று இடம்பெற்ற அகழ்வு பணியின் போது கை, கால்கள் கட்டப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலான எலும்புக்கூடொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

கைகள் இரண்டும் நெருக்கமாக பிணைக்கப்பட்ட நிலையிலும், கால்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று குறுக்காக பிணைக்கப்பட்டவாறும் புதைக்கப்பட்ட நிலையில் இம்மனித எச்சம் காணப்பட்டுள்ளது.

குறித்த சடலம் கை, கால்கள் கட்டப்பட்டு புதைக்கப்பட்டதா? அல்லது மத சடங்குகளின் அடிப்படையில் புதைக்கப்பட்டதா? என்பது தொடர்பாக எந்த வித ஊகிப்புக்களையும் தற்போது மேற்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


எனினும், இதுவரை மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மூலமாக குறித்த மனித உடல்கள் சாதாரண நிலையில் புதைக்கப்பட்டவை என நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாக இருந்தாலும் இறுதிக்கட்ட பரிசோதனையின் பின்னரே தெரியவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

'சதொச' வளாகத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக அடையாளப்படுத்தப்படும் மனித எலும்புக்கூடுகளை அப்புறப்படுத்தும் மற்றும் ஆய்வு செய்யும் பணியானது மன்னார் நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக போராசிரியர் தலைமையில் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று 71 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது. இதுவரை 126 முழுமையான மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 120 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டு, பொதி செய்யப்பட்டு, நீதிமன்ற கட்டடத்தொகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மீட்கப்படும் எலும்புக்கூடுகள், படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என பரவலாக பேசப்படுகிறது.

இந்த நிலையில் முடிவற்று மீட்கப்படும் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலான எலும்புக்கூடுகளால் மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers