என் மகனை என்னோடு சேர்த்து விடுங்கள் - சாந்தனின் தாயார் உருக்கம்

Report Print Tamilini in சமூகம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 27 ஆண்டுகளாக சிறை தண்டனையில் வாடும் சாந்தனை விடுவிக்குமாறு அவரது தாய் இலங்கையிலிருந்து உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட், பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் அளித்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தர்விட்டது. இதையடுத்து, ஏழு பேரையும் விடுவிக்கக் கோரி அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு தமிழக அரசு அனுப்பியது.

இந்நிலையில், தமிழக அரசின் பரிந்துரை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை ஆளுநர் கேட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, சிறையில் இருக்கும் சாந்தனின் தாயார் மகேஸ்வரி இலங்கையிலிருந்து இந்தியப் பிரதமர், குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர், முதல்வர், சட்ட அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் எழுதப்பட்டுள்ளதாவது,

மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்கட்கு

எனது பெயர் தில்லையம்பலம் மகேஸ்வரி. இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் வசித்து வருகின்றேன். என்னுடைய வயது 72ஐக் கடக்கின்றது. என்னுடைய மகனான சாந்தன் அவர்கள் மதிப்பிற்குரிய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 27 ஆண்டுகள் கடந்த நிலையில் சிறையில் வாடுகின்றார்.

அவரது விடுதலைக்காக மதிப்பிற்குரிய முன்னாள் முதல்வர் அம்மா அயராது உழைத்ததுடன் அவர்கள் விடுதலைக்கான முடிவை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கருணை அடிப்படையில் எடுத்திருந்தார். அவரது முடிவை சிரமேற்கொண்டு உழைத்து எனது மகனின் விடுதலைக்காக பரிந்துரைத்ததற்கு எம் குடும்பம் என்றும் தங்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளது. வெகுவிரைவில் என் மகன் என்னிடம் கிடைக்க ஆவன செய்யும்படி தங்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்கின்றேன்.

தங்களையும் ஒரு கடவுளாகத் தான் பார்த்து நான் நன்றி சொல்ல விளைகின்றேன்.

1991ம் ஆண்டு என்னை விட்டுப் பிரிந்த மகனை இது நாள் வரை நான் கண்டதில்லை ஒவ்வொரு தடவையும் அவருக்கு தூக்குத் தண்டனை என அறிவிக்கப்பட்ட போதும் நாமும் தூக்கு மேடைக்கு ஏறியிறங்கிக் கொண்டு தான் இருந்தோம். கடந்த 2013ம் ஆண்டு அவர் தந்தையான தில்லையம்பலமும் மாரடைப்பால் இறந்து விட்டார். எனது ஒற்றைக் கண் பார்வையும் தற்போது வலுவிழந்து விட்டது.

27 ஆண்டுகள் அவருக்கு மட்டுமளிக்கப்பட்ட தண்டனையல்ல எம் குடும்பமும் ஒவ்வோர் நாளும் நரகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். தயவு செய்து என் இறுதிக்காலத்தில் என்னை பராமரிக்கவாவது எனது மகனை என்னிடம் அளிக்கும்படி மன்றாடி வேண்டி நிற்கின்றேன்.

Latest Offers