தமிழ்நாட்டு கல்வித்துறை அமைச்சர் இலங்கையில் தெரிவித்துள்ள விடயம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவுடன் கலந்துரையாடி உள்ளதாக தமிழ்நாட்டு கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த வாரம் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகியோர் இலங்கை மீன்வளத்துறை அமைச்சருடன் கலந்துரையாடுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று காலை இந்திய முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் 102வது பிறந்த தின நிகழ்வுகள் கண்டியில் நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் நாளிதழ் ஒன்றின் ஆசிரியர் எஸ்.விஜயன் ஏற்பாடு செய்த எம்.ஜி.ஆர் தொடர்பான புகைப்படக் கண்காட்சி இடம்பெற்றுள்ளது.

கண்காட்சியை தமிழ்நாட்டு கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார் ஆகியோர் மற்றும் தமிழ்நாட்டு சிவகாசி மாவட்ட எம்.எல்.ஏ ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்துள்ளனர்.

இதன்போது உரையாற்றுகையிலேயே கே.ஏ.செங்கோட்டையன் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்ததாவது,

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனின் 102வது பிறந்த தின நிகழ்வுகள் அவர் பிறந்த ஊரான இலங்கை - கண்டியில் இன்று நடைபெறுகின்றது.

இதில் கலந்து கொள்வதற்கு எங்களுக்கு நல்ல வாய்ப்பு ஒன்றை இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஏற்படுத்தி தந்துள்ளார்.

இதனால் இவருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரு 150,000 நூல்கள் வழங்கப்படவுள்ளன.

அவர் பிறந்த ஊரில் நாங்கள் காலடி எடுத்து வைத்தது எங்களுக்கு பெருமையாக உள்ளது என இந்திய தமிழ்நாட்டு கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை, இலங்கை கல்வி அமைச்சர் இராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்ததாவது,

இலங்கை - இந்திய மீனவ பிரச்சினை தொடர்பில் இன்னும் ஓரிரு மாதங்களில் பேச்சுவார்த்தை இடம்பெறும்.

இன்று காலை எமது மீன்வளத்துறை அமைச்சரை நானும், தமிழ்நாட்டு கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனும் சந்தித்தோம். இதன்போது எமது இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் சென்னை செல்வதாக கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள மக்களை சந்தித்த பிறகு டெல்லி அரசாங்கமும், இலங்கை அரசாங்கமும் சேர்ந்து இதற்கு தீர்வு காண பேச்சுவார்தைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் இதன் மூலம் இலங்கை இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்.